சென்னை: புஷ்பா 2 திரைப்படத்தை திரையிட்டபோது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் ஒரு பெண் பலியானார், அவரது மகன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தெலுங்கானா போலீசார் அல்லு அர்ஜுனை கைது செய்தனர். இதையடுத்து உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அந்த நகல்கள் தாமதமாக நள்ளிரவில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டதால், அல்லு அர்ஜுன் இரவு முழுவதும் சஞ்சல்குடா சிறையில் இருக்க நேர்ந்தது. பின்னர் மறுநாள் காலை அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார். சில சினிமா பிரபலங்கள் அவரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அதன் பிறகு அல்லு அர்ஜுன் தானே கார் ஓட்டிக்கொண்டு முதலில் தனது, மாமா சிரஞ்சீவியின் (அல்லு அர்ஜுன் அத்தையின் கணவர்தான் சிரஞ்சீவி) வீட்டிற்கு சென்று ஒரு மணி நேரம் செலவிட்டார். பின்னர், சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் வீட்டிற்கு சென்று பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். இதனால் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அல்லு குடும்பங்களுக்கு இடையே இதுவரை இருந்த கருத்து வேறுபாடுகள் தற்காலிகமாக முடிவுக்கு வந்துவிட்டதாக அனைவரும் நினைத்தனர்.
கண்டுகொள்ளாத ராம் சரண்: இவ்வளவு சம்பவங்கள் நடந்தும், அல்லு அர்ஜுனின் அத்தை மகனான, அதாவது, சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் அல்லு அர்ஜுனை இதுவரை சந்திக்கவில்லை. தொலைபேசியில் கூட என்ன விஷயம் என்று கேட்கவில்லை. எதுவும் நடக்காதது போல் நடந்து கொண்டார். வருண் தேஜும் அவ்வாறே இருந்தார்.
சிரஞ்சீவியின் தம்பி, பவன் கல்யாண், இன்னொரு சகோதரர் நாக பாபு ஆகியோர் அல்லு அர்ஜுன் விஷயம் குறித்து வெளிப்படையாக பேசிக்கொண்டாலும், ராம் சரண், வருண் தேஜ், சாய் தரம் தேஜ் ஏன் பேசவில்லை என்பது அவர்களுக்கே வெளிச்சம். ராம் சரண் தற்போது கேம் சேஞ்சர் புரோமோஷன்ஸ் மீது கவனம் செலுத்தி வருகிறார். மெகா ஸ்டார் குடும்பத்திற்கும் அல்லு குடும்பத்திற்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் இன்னும் சரியாகவில்லை என்றே தெரிகிறது. அல்லு அர்ஜுன் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தை சந்தித்த போதிலும், அத்தை மகனாக இருந்தும் ராம் சரண் ஆறுதலாக போய் நிற்கவில்லை என்பது தெலுங்கு சினிமா மற்றும், அரசியல் வட்டாரத்தின் பேசுபொருளாக உள்ளது.
முன்னதாக, சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருந்தார். சிறையிலிருந்து ரிலீஸ் ஆனதும், அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி வீட்டுக்கும், நாகேந்திர பாபு வீட்டுக்கும் போய் நன்று தெரிவித்தார்.
சிரஞ்சீவி குடும்பம்: சிரஞ்சீவியின் குடும்பம் பெரியது (chiranjeevi family tree). சிரஞ்சீவியின் சகோதரர் நாகேந்திர பாபு, நடிகர் மற்றும் தயாரிப்பாளராக தனது முத்திரையைப் பதித்துள்ளார். குறிப்பாக 'ஆரஞ்ச்' மற்றும் 'அஞ்சி' போன்ற படங்களில் அவரது கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. குடும்பத்தின் கலை பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் கடத்தும், அவரது மகன் வருண் தேஜ் மற்றும் மகள் நிஹாரிகா கொனிடெலா ஆகியோர் தற்போது தெலுங்கு திரையுலகில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வருண் தேஜ், 'கஞ்சே' திரைப்படத்தில் ஏற்று நடித்த கதாபாத்திரம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. நிஹாரிகா கொனிடெலா, நடிகையாக மட்டுமல்லாமல் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் தயாரிப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். 'ஓகா மனசு' போன்ற படைப்புகள் மூலம் அவர் தனது தனித்துவத்தை நிரூபித்துள்ளார்.
சிரஞ்சீவியின் மற்றொரு தம்பி, பவன் கல்யாண், தெலுங்கு சினிமாவில் செல்வாக்கு மிக்க நபராகவும், ஆந்திர துணை முதல்வராகவும் உள்ளார். 'கோகுலம்லோ சீதா' போன்ற படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. தமிழ் ரசிகர்கள் அவர் டான்சை கேலி செய்தாலும், ஆந்திரா, தெலுங்கானாவில் இப்போதும் அவர் அரசியலை தாண்டி நடிகராகவும் கொண்டாடப்படுகிறார். இவ்வாறு, சிரஞ்சீவி குடும்பம் தெலுங்கு திரையுலகில் பல ஆண்டுகளாக தங்களது பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.