தக்காளியை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்த வெங்காயம் விலை! ஆஹா!

post-img

பருவநிலை மாறுபாடுகள், சில மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காய்கறிகள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

கடந்த வாரம் தக்காளி விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து ஒரு கிலோ தக்காளி ரூ.100-ஐ எட்டியது. மேலும் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏறுமுகமாக இருந்து வந்த தக்காளியின் விலை நேற்று சற்று குறைந்தது. இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.95-க்கும், சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ130-க்கும் விற்கப்படுகிறது. சென்னையில் வெளி மார்க்கெட்டுகளில் 1 கிலோ தக்காளி ரூ.140 வரை விற்கப்படுகிறது.

சாம்பார் வெங்காயம் என்று அழைக்கக்கூடிய சின்ன வெங்காயம் கடந்த வாரம் கிலோரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலை கிடுகிடுவென உயர்ந்து சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் விளையும் நாட்டு வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

இதனால், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து சின்ன வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கும் போதிய அளவில் விளைச்சல் இல்லாத காரணத்தால், ஒட்டுமொத்தமாகவே வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் தரத்தை பொறுத்து ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது.

தக்காளி போன்று சின்ன வெங்காயமும் சமையலுக்கு அத்தியாவசியமானது. இந்த வெங்காயம் இன்றி எந்த உணவும் தயாரிக்க முடியாது. இந்நிலையில், சின்ன வெங்காயத்தின் வரத்து குறைவால் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. தக்காளி விலை உயர்வின் அதிர்ச்சியே அகலாத நிலையில் சின்ன வெங்காயம் விலை உயர்வால் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

தொடர்ந்து காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கவலை அடைந்துள்ளனர்.

Related Post