கடனை வசூலிக்கச் சென்ற இடத்தில்.. கோவை பெண் செய்த காரியம்.. அலறியடித்து ஓடிய ஊழியர்கள்

post-img

கோவை: கோவையில் பெண்ணிடம் கடனை வசூலிக்கச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியரை நாயை ஏவிவிட்டு கடிக்கச் செய்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணை காவல் துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
வீட்டுக் கடன், கார் கடன், இருசக்கர வாகன கடன், செல்போன் கடன், கிரெடிட் கார்டு கடன், சுற்றுலா செல்ல கடன் என இப்போதெல்லாம் கடனில்தான் பலரது வாழ்க்கையே ஓடிக் கொண்டிருக்கிறது. சமூகத்தில் உயர்ந்த நிலையில் தாங்கள் இருக்கிறோம் என காட்டிக் கொள்வதற்காக ஆடம்பரப் பொருள்கள் வாங்க கடன் வாங்கும் போக்கு தற்போது அதிகளவில் காணப்படுகிறது.

முன்பெல்லாம் இந்திய குடும்பங்களிடையே பாரம்பரியமான சேமிப்பு பழக்கம் என்பது கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்த நிலை மாறி ஒவ்வொரு குடும்பங்களிலும் சேமிப்பு என்பது இருக்கிறதோ இல்லையோ அனைவரது கையிலும் கடனும், கிரெடிட் கார்டுகளும் உள்ளன. வாங்கிய கடனுக்கான தவணையை செலுத்த முடியாமல் ராக்கெட் வட்டியை விட பலமடங்கு வட்டியை கிரெடிட் மூலம் பலரும் கட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் நிதி நிறுவனத்தில் கடனில் கார் வாங்கிவிட்டு திரும்பிச் செலுத்தாமல் இருந்த பெண்ணிடம் மாதத் தவணை வசூலிக்கச் செய்த ஊழியர்கள் மீது நாயை ஏவிவிட்டு கடிக்கச் செய்துள்ள சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் விவேகானந்தா தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 45). இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணம் வசூலிக்கும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ஜெகதீஷின் தனியார் நிதி நிறுவனத்தில் வெள்ளலூர், மகாகணபதி நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி தர்ஷனா (எ) பிரியா (29) கார் வாங்குவதற்காக லோன் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், காருக்காக வாங்கிய லோனின் மாதத் தவணையை சரிவர கட்டாமல் இருந்து வந்துள்ளார். கிட்டத்தட்ட 20 மாதங்களாக பணம் கட்டாததால் ஜெகதீஷ் மற்றும் அவருடன் வேலை செய்து வந்த சரவணன், சுரேஷ் ஆகிய மூவரும் தர்னாவின் வீட்டிற்கு பணம் வசூலிப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது, நிதி நிறுவன ஊழியர்கள் தர்ஷனாவிடம் பணம் கேட்ட நிலையில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை ஜெகதீஷ் மற்றும் ஊழியர்கள் பறிமுதல் செய்ய முயன்றுள்ளனர். அப்போது, தர்ஷனாவின் கணவர் மணிகண்டன் காரை வெளியில் ஓட்டிச் செல்ல முயன்றுள்ளார். உடனடியாக ஜெகதீஷ் மற்றும் ஊழியர்கள் காரை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். அப்போது. சற்றும் எதிர்பாராத விதமாக தர்ஷனா வளர்ப்பு நாயை ஏவிவிட்டு அவர்களை கடிக்கச் செய்துள்ளார்.

அப்போது, பாய்ந்த வந்த அந்த நாய் ஜெகதீஷனை பல இடங்களில் சரமாரியாக கடித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஜெகதீஷிந் கால், அடிவயிறு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஊழியர்கள் ஜெகதீஷை மீட்டு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஜெகதீஷ் போத்தனூர் காவல் நிலையத்தில் தர்ஷனா மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்பேரில் காவல் துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தர்ஷனாவை கைது செய்தனர். காருக்காக வாங்கிய லோனுக்கு மாத தவணை வசூலிக்கச் சென்ற நபரை நாயை ஏவிவிட்டு கடிக்கச் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post