சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். "எங்கள் கொள்கைத் தலைவர் அம்பேத்கரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
அம்பேத்கர்...
அம்பேத்கர்... அம்பேத்கர்...
அவர் பெயரை
உள்ளமும் உதடுகளும் மகிழ
உச்சரித்துக்கொண்டே இருப்போம்.
எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அரசியலமைப்பு உருவாகி 75 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி, இரு நாள் விவாதம் நடந்தது. நேற்றைய தினம் நடந்த நிகழ்வின் முடிவில், மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அமித் ஷா, "இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரை கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு கடவுள் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்" என்று பேசியிருந்தார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இன்றும் நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் புகைப்படத்துடன் போராட்டமும் நடத்தப்பட்டது. அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில் தான் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும், அமித் ஷாவுக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.