‛சிவசக்தி’.. நிலவில் லேண்டர் தரையிறங்கிய இடத்துக்கு மோடி பெ

post-img

திருவனந்தபுரம்: நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்துக்கு ‛சிவசக்தி' என பெயரிடுவதாக பிரதமர் மோடி கூறினார். இதற்கு ஒருதரப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் பிரதமர் மோடி பெயர் வைத்தது சரியா? தவறா? என்பது பற்றி இஸ்ரோ தலைவர் சோமநாத் விளக்கி உள்ளார்.
இந்தியா சார்பில் நிலவு ஆய்வுக்காக சந்திரயான் திட்டம் தொடங்கப்பட்டது. சந்திரயான் 1, சந்திரயான் 2 திட்டத்தை தொடர்ந்து சந்திரயான் 3 திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி விண்வெளிக்கு செலுத்தப்பட்டது.
கடந்த 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பிறகு அடுத்த 4 மணிநேரத்தில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறியது. தற்போது விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவை நிலவில் ஆய்வு செய்து வருகின்றன.
இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்நிலையில் தான் பிரிக்ஸ் மாநாட்டுக்கான தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி நேற்று நேராக பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்தில் இறங்கினார். அதன்பிறகு பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் சந்திரயான் - 3 விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டினார்.
சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய இடம் 'சிவசக்தி' என்றழைக்கப்படும்.. இஸ்ரோவில் பிரதமர் மோடி பேச்சு
இந்த வேளையில் சந்திரயான் - 3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு சிவசக்தி எனவும், சந்திரயான் - 2 விண்கலம் தரையிறங்கிய பகுதிக்கு 'திரங்கா' எனவும் பெயர் வைப்பதாக தெரிவித்தார். மேலும் சிவசக்தி என்பது பெண்களின் சக்தியை குறிக்கும். சந்திரயான் - 3 திட்டத்தில் செயல்பட்ட பெண் விஞ்ஞானிகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ‛சிவசக்தி' என பெயர் சூட்டுவதாக தெரிவித்தார்.
இதற்கிடையே தான் பிரதமர் மோடியின் இந்த செயலுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நிலவில் விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு பிரதமர் மோடி பெயர் சூட்டலாமா? கூடாதா? என விவாதமும் கிளம்பியது. கடந்த 1967ஆம் ஆண்டு போடப்பட்ட வெளிப்புற விண்வெளி ஒப்பந்தத்தின்படி நிலவை எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெயர் சூட்டும் நடவடிக்கை பேசும்பொருளானது.
இந்நிலையில் தான் கேரளா வெங்கனூரில் உள்ள ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி தேவி கோவிலில் இன்று இஸ்ரோ தலைவர் சோமநாத் தரிசனம் செய்தார். அதன்பிறகு பெயர் சர்ச்சை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சோமநாத் கூறுகையில், ‛‛நிலவில் விண்கலம் தரையிறங்கும் இடத்திற்கு பெயரிட இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. தரையிறங்கும் இடத்திற்கு இப்படி பெயர் சூட்டுவது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு பல நாடுகள் பெயர் சூட்டியுள்ளன. நிலவில் உள்ள பள்ளம் ஒன்றுக்கு சாராபாய் என பெயர் இருக்கிறது. பிற நாடுகளும் ஆய்வு தொடர்பான இடங்களுக்கு பெயர் வைக்கும் வழக்கத்தை வைத்துள்ளன. இது ஒரு மரபு. சர்ச்சையல்ல'' என்றார்.
மேலும் சந்திரயான் 3 ஆய்வ குறித்து அவர் கூறுகையில், ‛‛இதுவரை சந்திரயான் -3 திட்டத்தில் இருந்து பல சுவாரஸ்யமான தரவுகளை இஸ்ரோ பெற்றுள்ளது. ரோவர் திட்டமிட்டப்படி நகர்கிறது. ரோவரில் இருந்து மிகவும் சுவாரஸ்யமான தரவுகளைப் பெற்று வருகிறோம். உலகில் முதல் முறையாக பெறப்பட்ட தரவு இது. இதை, விஞ்ஞானிகள் வரும் நாட்களில் விளக்குவார்கள்" என்றார்.

Related Post