டெல்லி: சனாதனத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழக்கமிட்டதற்காக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அம்மாநாட்டில் டெங்கு, மலேரியா, காலரா போன்ற தொற்று நோய் சனாதனம். சனாதனத்தை எதிர்க்கக் கூடாது- சனாதனத்தை ஒழித்தே ஆக வேண்டும் என பேசினார். அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மேலும் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பீகார், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி சாமியார் ஒருவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ10 கோடி விலை அறிவித்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
அத்துடன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன எதிர்ப்பு பேச்சு குறித்து விவாதித்தது. திமுக இடம்பெற்றுள்ள 'இந்தியா" கூட்டணி தலைவர்களான மமதா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் "இந்தியா" கூட்டணியில் சலசலப்பும் ஏற்பட்டது.
ஆனால் கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே, உதயநிதியின் கருத்தை ஆதரித்து பேசியிருந்தார். இது கர்நாடகா அரசியலில் புயலை கிளப்பி இருந்தது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் விரிவான விளக்க அறிக்கை வெளியிட்டிருந்தனர். ஆனாலும் தமிழ்நாடு பாஜக இந்த பிரச்சனையை தொடர்ந்து கையில் எடுத்து பேசி வருகிறது. தமிழ்நாட்டில் பாஜகவினர், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போராட்டமும் நடத்தினர்.
இதனிடையே மும்பையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இரு சமூகங்களிடையே மோதலை உருவாக்குதல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் மீது அமைச்சர் உதயநிதி மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
அதேபோல "இந்தியா" கூட்டணி உருவானதே சனாதன தர்மத்தை ஒழிக்கத்தான் என தமிழ்நாடு அமைச்சர் பொன் முடி பேசியதும் சர்ச்சையானது. திமுக எம்.பி. ஆ.ராசா, சனாதனத்தை எச்.ஐ.வி, தொழுநோயுடன் ஒப்பிட்டு பேசியதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.