சென்னை: சென்னை தி.நகரில் உள்ள தனியார் வங்கிக்குள்புகுந்து பட்டப்பகலில் வங்கி ஊழியரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற நபரை மற்ற ஊழியர்கள் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கத்தியால் வெட்டப்பட்டதில் காதில் காயமடைந்த ஊழியர் தினேஷ் என்பவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சென்னை தி.நகர் வர்க்கீஸ் சாலையில் ஹெச்டிஎஃப்சி வங்கி கிளை ஒன்று உள்ளது. இந்த வங்கியில் வழக்கம்போல் ஊழியர்கள் இன்று பணி செய்துகொண்டு இருந்தனர். அப்போது வாடிக்கையாளர் போல் வந்த நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்த வங்கி ஊழியர் ஒருவரை வெட்டியுள்ளார்.
இதில் காதில் வெட்டுக்காயம் அடைந்து, வலி தாங்க முடியாமல் அந்த ஊழியர் கத்தி கூச்சலிட்டார். அருகில் இருந்த ஊழியர்கள் அவரது தலையில் இருந்து ரத்தம் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அப்போது தான் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஊழியரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
மேலும் உடனடியாக இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற நபரை கைது செய்தனர். இதற்கிடையே கத்தியால் வெட்டப்பட்டதில் வங்கி ஊழியருக்கு காதில் இருந்து ரத்தம் கொட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் காதில் வெட்டுப்பட்டது வங்கி ஊழியர் தினேஷ் என்பது தெரியவந்தது.
பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து வங்கி ஊழியர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மாம்பலம் போலீசார், வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் வங்கி ஊழியரின் மீதான தாக்குதலுக்கு என்ன காரணம் என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.