“ரேவதி இறந்தது மகளுக்கு இன்னும் தெரியாது.. ஊருக்கு போயிருக்காங்கனு சொல்லிருக்கோம்” பாஸ்கர் உருக்கம்!

post-img
ஹைதராபாத்: புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதியின் கணவர், நடந்த சம்பவங்களுக்கு நடிகர் அல்லு அர்ஜுனை குற்றம்சாட்டவில்லை என்றும், தான் போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெற தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். தனது மனைவி இறந்தது பற்றி மகளுக்கு தெரியாது என்றும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் சிறப்புக் காட்சியை பார்க்க, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் டிசம்பர் 4 ஆம் தேதி இரவு குவிந்தனர். அந்தத் திரையரங்கிற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (39) என்ற பெண் உயிரிழந்தார். அவரது 9 வயதான மகன் படுகாயமடைந்த நிலையில், தற்போது கோமா நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அல்லு அர்ஜுன் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும், சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் மருத்துவச் செலவை ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்தச் சம்பவத்தில் அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வருவது குறித்து முறையாக போலீசாருக்கு தகவல் கொடுக்காத திரையரங்க உரிமையாளர்கள் மீதும், முன் அறிவிப்பின்றி திடீரென வந்து கூட்ட நெரிசலுக்குக் காரணமாக இருந்ததாக நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி உயிரிழந்தது தொடர்பாகவும் திரையரங்க உரிமையாளர்கள் மீதும், நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கடந்த 13 ஆம் தேதி அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அல்லு அர்ஜுன் பட ரிலீஸின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான சம்பவம் தெலுங்கானாவில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரேவதியின் கணவர் பாஸ்கர் இந்நிலையில் கூட்ட நெரிசலால் மனைவியை இழந்த ரேவதியின் கணவர் பாஸ்கர், நடிகர் அல்லு அர்ஜுன் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக கூறி உள்ளார். தனது மகன் இன்னும் கோமா நிலையில் உள்ள நிலையில், தனது மகனின் சிகிச்சை தொடர்பாக அல்லு அர்ஜுன் தரப்பில் இருந்து முழு ஆதரவைப் பெற்று வருவதாகக் கூறியுள்ளார். பாஸ்கர் கூறுகையில், “எங்கள் மகன் ஸ்ரீ தேஜ், அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகன் என்பதால், அவனது வற்புறுத்தலின் பேரில் தான் சிறப்புக் காட்சிக்கு குடும்பத்தோடு சென்றோம். அப்போது ஏற்பட்ட இந்த அசம்பாவிதத்திற்கு நாங்கள் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. அதை எங்கள் துரதிர்ஷ்டம் என்று கருதுகிறோம். அல்லு அர்ஜுனுக்கும் என் மனைவி இறந்த கூட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அல்லு அர்ஜுன் கைதுக்காக நாங்கள் குற்றம் சாட்டப்பட்டோம், ஆனால் போராடும் வலிமை எங்களுக்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார். மகளுக்கு அம்மா இறந்ததே தெரியாது மேலும் பேசியுள்ள பாஸ்கர், எங்கள் மகன் கடந்த 20 நாட்களாக கோமா நிலையில் இருக்கிறான். அவன் சில நேரங்களில் கண்களைத் திறக்கிறான். ஆனால் இன்னும் யாரையும் அடையாளம் காணவில்லை. சிகிச்சை எவ்வளவு காலம் எடுக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. எங்கள் மகளுக்கு, தாயின் மரணம் குறித்து சொல்லவில்லை. "அம்மா ஊருக்குப் போயிருக்கிறார்” என்று சொல்லிவிட்டோம். என்ன நடந்தது என்று அவளுக்கு இன்னும் தெரியாது” என்று உருக்கமாகப் பேசியுள்ளார். மேலும், “புஷ்பா-2 படத்தின் தயாரிப்பாளர்கள் 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். தயாரிப்பாளர் நவீன் எர்னேனி இன்று ஸ்ரீ தேஜை பார்த்தபோது, காசோலை வழங்கப்பட்டது. அல்லு அர்ஜுன் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வருகிறார். வழக்கை வாபஸ் பெற நான் தயாராக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார் பலியான ரேவதியின் கணவர் பாஸ்கர்.

Related Post