பேல் பூரி, சேவ் பூரி, வடாபாவ் உள்ளிட்ட பல சாட்கள் (chaat) நமது நாட்டின் பல பகுதிகளிலும் மக்களால் ருசித்து சாப்பிட்டு அனுபவிக்கப்படும் சுவை மிகுந்தவையாக இருக்கின்றன. எனினும் எல்லா வகை சாட்-ஐ (chaat) விடவும் மக்கள் மத்தியில் பானி பூரி மிகவும் பிரபலமாக இருக்கிறது.
உண்மையை சொல்வதென்றால் பானி பூரி சாப்பிடுவதில் பலரும் வெறித்தனமாக இருக்கிறார்கள். பிராந்தியம் அல்லது சமூக பாகுபாடின்றி பானி பூரி அனைத்து தரப்பு மக்களாலும் மிகுந்த ஆர்வமுடன் உண்ணப்படுகிறது. பெரும்பாலான உணவு பிரியர்களுக்கு மிகவும் பிரியமான சாட் ஐட்டமாக இருக்கிறது இந்த பானி பூரி. நீங்கள் வெவ்வேறு வகையான உணவு வகைகளை முயற்சிக்கும் ஃபுட்டியாக இருந்தால் வித்தியாசமான அதே சமயம் ருசியான ஸ்பெஷல் பானி பூரியை சுவைக்க அண்டை மாநிலமான கர்நாடாகாவிற்கு செல்லலாம்.
தலைநகர் பெங்களூரில் இருந்து வெறும் 80 கிமீ தொலைவில் உள்ளது பங்கார்பேட் (Bangarpet). பெங்களூரின் புறநகரில் உள்ள பங்கார்பேட் நகரம் அதன் தனித்துவமான பானி பூரிக்கு பெயர் பெற்றது. இங்கு கிடைக்கும் புகழ்பெற்ற ஒயிட் பானி பூரி பற்றி தான் நாங்கள் இங்கே சொல்ல போகிறோம். பெங்களூருக்கு அருகில் உள்ள இந்த சிறிய நகரத்தில்தான் தற்போது பல இடங்களில் பிரபலமாகி இருக்கும் White Paani Puri சாட் உருவானது.
ஒயிட் பானி பூரியின் ஸ்பெஷல் என்ன?
பங்கார்பேட் நகரில் கிடைக்கும் பானி பூரியில் வழக்கமான பாரம்பரிய மெரூன் அல்லது பச்சை நிற புதினா சட்னிக்கு பதிலாக பார்ப்பதற்கு தண்ணீர் போலவே இருக்கும் ஸ்பெஷல் பானி ஊற்றி தரப்படுகிறது. இதுவே ஒயிட் பானி பூரியை தனித்துவமாக்குகிறது. நன்கு பிரபலமாக உள்ள இந்த உணவு முதன்முதலில் தயார் செய்து மக்களுக்கு வழங்கிய முதல் ஸ்டாலாக இருக்கிறது. இந்த Ramesh Chit Chat என்ற கடை. இந்த ஸ்பெஷல் பானி பூரிக்கு கொடுக்கப்படும் வெள்ளைநிற பானி பார்ப்பதற்கு வெறும் தண்ணீர் போலவே இருந்தாலும் மிகவும் ஹாட்டானது மற்றும் ஸ்பைஸியானது.
1970-களில் பங்காரப்பேட்-ஐ சேர்ந்த ஆர் பாண்டுரங்க ஷெட்டி என்பவர் பானி பூரி கடை நடத்தி வந்தார். இவரது மகன் ரமேஷ் தனது தந்தையின் பானி பூரி கடையை வழக்கமான பானிபூரி கொண்ட கடையாக நடத்த விரும்பவில்லை. புதிதாக ஏதாவது செய்ய விரும்பினார். தனது கடை பானி பூரிக்கு ஹாட் & ஸ்பைசியாக இருக்கும் வெண்மை நிற பானியை உருவாக்கினார். இவரை பின்பற்றி மற்ற பானிபூரி கடைகளும் இந்த ஸ்பெஷல் வெரைட்டியை பின்பற்ற முயற்சித்தாலும் அவர்களால் பெரிய வெற்றியை பெற முடியவில்லை.
உண்மையில் இவர் தயார் செய்து கொடுக்கும் பானி பூரிக்கான ஸ்பெஷல் பானி, உண்மையில் வெள்ளை நிறத்தை விட தெளிவாக உள்ளது. இந்த ஸ்பெஷல் பானிக்கு தண்ணீர் போன்ற வெண்மை நிறத்தை கொடுக்க சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, எலுமிச்சை அனைத்தையும் ஒன்றாக நசுக்கி, தண்ணீரில் ஊறவைத்து பின் வடிகட்டப்படுவதாக சொல்லப்படுகிறது.. ஆனால் இந்த பானியின் நிறம் மாறாமல் இருப்பதற்கான சீக்ரெட் மிகவும் பாதுகாக்கப்பட்டு வரும் குடும்ப ரகசியம் என்று ரமேஷ் கூறுகிறார். இந்த டிஷ்ஷின் விலை ரூ.25 ஆகும்.