நெல்லை: கேரளாவில் உள்ள மருத்துவ கழிவுகள் தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் கொட்டப்படுவதாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று காலையில் கேரளாவில் இருந்து அதிகாரிகள் நெல்லை மாவட்டத்தில் மருத்துவ கழிவுகள் கிடக்கும் இடத்தில் ஆய்வு செய்தனர். எங்கிருந்து கொண்டு வரப்பட்டதோ, மீண்டும் அங்கேயே கொண்டு செல்லுவதற்காக 10க்கும் மேற்பட்ட லாரிகளில் கழிவுகள் ஏற்றப்பட்டு வருகின்றன.
நெல்லை, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் கொட்டப்பட்டு வந்த மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கு அள்ளிச்சென்ற வரலாற்று சம்பவம் இன்று நடந்துள்ளது. எங்கிருந்து கொண்டு வரப்பட்டதோ, மீண்டும் அங்கேயே அள்ளி செல்லுவதற்காக 10க்கும் மேற்பட்ட லாரிகள் வந்தன. கழிவுகள் அள்ளப்பட்டு மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்லும் பணிகள் தொடங்கியுள்ளன.
கேரளாவில் இருந்து அண்டை மாநிலமான தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது. குறிப்பாக நெல்லை, தென்காசி, குமரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள், பாஜகவினர் தமிழக அரசுக்கு நடவடிக்கை எடுக்கும்படி கூறி வந்தன.
கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக இரவு நேரங்களில் நெல்லை மாவட்டத்தின் நடுக்கல்லூர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இந்த மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக சுத்தமல்லி போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து இது தொடர்பான வழக்கை விசாரித்தது. அப்போது கூறிய தீர்ப்பாயம், “கேரள அரசு மருத்துவக் கழிவுகளை இப்படி தமிழகத்தில் வந்து கொட்டுவது முதல் முறையல்ல. இருப்பினும் இதனை எளிதாக கடந்துவிட முடியாது. மருத்துவமனைகளில் இருந்து வரும் மருத்துவ கழிவுகளை அழிப்பது அந்த மருத்துவமனைக்கு தான் முழு பொறுப்பு.
மருத்துவக் கழிவுகள் விதிகள் 1998-ன் படி கழிவுகளை பாதுகாப்பாக அழிக்க அதற்குரிய மருத்துவமனைகள் கடமைப்பட்டுள்ளன. இதன்படியே, சாதாரண கழிவுகள் அபாயகரமான கழிவுகள் என இரு வகையாக தரம்பிரித்து அழிக்க வேண்டும். அப்படி இதை செய்யாமல் திருட்டுத்தனமாக மற்ற மாநிலத்திற்கு அனுப்பி வைத்து கொட்டுவது சட்டவிரோதம். சமூக நலன் மீது அக்கறையில்லா பொறுப்பற்ற செயல். என்று கூறியது.
இதையடுத்து தான் இன்று கேரள மாநில அதிகாரிகள் வருகை தந்தனர். நெல்லை மற்றும் திருவனந்தபுரம் ஆட்சியர்கள், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள், மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நெல்லை சுத்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 4 பிரிவுகளாக பிரிந்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கேரளாவில் இருந்து வந்த 11 டாரஸ் லாரிகளில் மருத்துவ கழிவுகளை ஏற்றும் பணி தொடங்கியது.
ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மீண்டும் மருத்துவக் கழிவுகளை கேரளாவுக்கே கொண்டு செல்வதற்காக இந்த கழிவுகள் லாரிகளில் ஏற்றப்பட்டன. எங்கிருந்து கொண்டு வரப்பட்டதோ, மீண்டும் அங்கேயே கொண்டு செல்லுவதற்காக லாரிகளில் கழிவுகள் ஏற்றப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்நாடு சுற்றுப்புற ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.