இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் பெய்த பருவமழையால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து சந்தைக்கு வரவிருந்த தக்காளியின் வரத்து குறைந்தது. இதனால் தக்காளியின் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது.
தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ 180 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வியாபாரிகள் கூறுகையில் தினமும் மார்க்கெட்டிற்கு 1200 டன் தக்காளி கொண்டு வரப்படும்.
ஆனால் தற்போது 300 டன் மட்டுமே வந்துள்ளது. கிட்டதட்ட 4 மடங்கு குறைவு. இதனால் இதன் விலை ஏற்றப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் தக்காளி விற்பனை ரூ 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் பொருளாதார ரீதியாக கடும் பிரச்சினையை சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர கடந்த சில தினங்களாக தமிழகத்தில் 300 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ 60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் மேலும் 200 ரேஷன் கடைகளை சேர்த்து மொத்தம் 500 ரேஷன் கடைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.
இதற்காக நேற்றைய தினம் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இன்று தக்காளியின் விலை ரூ 10 உயர்ந்து ரூ 190 க்கு விற்பனையாகிறது.