ஹைதராபாத்: அல்லு அர்ஜுனுக்கு எதிரான எஃப்ஐஆரை ரத்து செய்யும் வழக்கை அவசர விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அல்லு அர்ஜுன் சிறையில் இருக்க வேண்டாம்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் ஆர்.டி.சி. கூட்டுரோடு சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் கடந்த டிசம்பர் 4ம் தேதி புஷ்பா-2 திரைப்பட வெளியீடு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. படத்தில் நடித்த தெலுங்கின் பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் படக்குழுவினர் தியேட்டரில் வந்து படத்தை பார்த்தனர். இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியதால், ஹைதராபாத் ஆர்.டி.சி. கூட்டுரோடு சாலையில் கூட்ட நெரிசல் மிகவும் அதிகமானது.
அல்லு அர்ஜுனை பார்க்கவும், சிறப்புக்காட்சியை பார்க்கவும், 35 வயதாகும் ரேவதி என்ற பெண் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் தியேட்டருக்கு வந்திருந்தார். படம் திரையிட தயாராக இருந்த சிறிது நேரத்திற்கு முன்பு கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் அதிகமாகியது. இதில் ரசிகர்களிடம் சிக்கி காயம் அடைந்த ரேவதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஹைதராபாத் சிக்கட்பள்ளி போலீசார் தியேட்டர் நிர்வாகத்தினர் மீதும், நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் வழக்கு பதிவு செய்தனர். தியேட்டர் நிர்வாகத்தினர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் அல்லு அர்ஜுன் இன்று காலை சிங்கட்பள்ளி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்து இருக்கிறது.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுவாரா அல்லது காவல் நிலையத்தில் ஜாமீன் வழங்கப்படுமா என்பது பற்றி இதுவரை தெரியவில்லை. இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) ரத்து செய்யக் கோரி நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவை உடனடியாக அவசர விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு அல்லு அர்ஜுன் வழக்கறிஞர்கள் நிரஞ்சன் ரெட்டி, அசோக் ரெட்டி ஆகியோர், தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜுவ்வாடி ஸ்ரீதேவியின் பெஞ்சில் மனுவைத் தாக்கல் செய்தனர்.
மேலும் திங்கட்கிழமை வரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். அப்போது தெலுங்கானா மாநில கூடுதல் அரசு வக்கீல், போலீசாரிடம் கேட்டு பிற்பகலில் சொல்கிறேன் என்றார். அதன்பிறகு மீண்டும் இன்று மதியம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் முதன்மை குற்றவாளி இல்லை என்று கூறிய உயர்நீதிமன்றம் அவருக்கு 4 வாரம் வரை இடைக்கால ஜாமீன் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டது.
முன்னதாக அல்லு அர்ஜுனை இன்று காலை கைது செய்த போலீசார் கீழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். ஆனால் நீதிமன்றம்அனுமதி வழங்காத நிலையில் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதனால் அவர் சிறை செல்லும் சூழல் உருவான நிலையில் உயர்நீதிமன்றம் 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளதால் அவர் வீடு திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.