காரின் முன் சீட்டில் குழந்தைகளை அமர வைக்க வேண்டாம்! பட்டென விரிந்த ஏர்பேக்.. 6 வயது சிறுவன் மரணம்

post-img
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் ஒரு சிறு விபத்து நடந்துள்ளது. அதில் காரின் ஏர் பேக் ட்ரிக்கர் ஆனதில், முன்சீட்டில் அமர்ந்திருந்த சிறுவன் பரிதாபமாக கொல்லப்பட்டான். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுவாக கார்களில் உயிரிழப்புகளை தடுக்க ஏர்பேக் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால், சில மோசமான சம்பவங்களில் அந்த ஏர் பேக் காரணமாகவே கூட உயிரிழப்புகள் ஏற்படும். அப்படியொரு மிக மோசமான விபத்து தான் இப்போது மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் நடந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம். நவி மும்பையின் வாஷி பகுதியில் கார் ஒன்று எதிர்பாராத விதமாக லேசான விபத்தில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக ஏர்பேக் ஆக்டிவேட் ஆனதில், அது மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்தான். விபத்து நடந்தபோது குழந்தை முன் இருக்கையில் அமர்ந்து இருக்கிறான். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதாவது அவர்கள் சென்ற காருக்குமுன்னால் சென்ற எஸ்யூவி கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த எஸ்யூவி கார் கண்ட்ரோலை இழந்ததில் அது மீடியனில் மோதியுள்ளது. இதில் பின்னால் வந்த இந்த காரின் பானெட் மீதும் அது மோதியதில் ஏர்பேக் ட்ரிக்கர் ஆனது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த சிறுவன், அவரது தந்தை மற்றும் இரண்டு உறவினர்கள் என மொத்தம் நான்கு பேர் வேகன் ஆர் காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது தான் இந்த விபத்து நடந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த போலீஸ் அதிகாரி தீபக் காவிட் கூறுகையில், "திடீர் விபத்தால் ஏர்பேக் ட்ரிக்கர் ஆகியுள்ளது. ஏர்பேக் காரணமாகவே டிரைவர் காப்பாற்றப்பட்டு இருக்கிறார். அதேநேரம் சிறுவன் சற்று முன்னால் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஏர்பேக் திடீரென ட்ரிக்கர் ஆனதில், அது சிறுவனின் முகத்தில் அதிவேகமாக மோதியுள்ளது. அதுவே உயிரிழப்புக்கு காரணமாக இருந்துள்ளது" என்றார். ஏர்பேக் மோதியதில் சிறுவன் மயக்கமடைந்துள்ளான். இதையடுத்து அருகே இருந்தவர்கள் அந்த சிறுவனை மீட்டு அருகே இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அந்த சிறுவன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். மூச்சுத்திணறல் காரணமாக அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏர்பேக் திடீரென ட்ரிக்கர் ஆனது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கும் நிலையில், இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. பொதுவாக ஏர்பேக் என்பது கார்களில் ரொம்பவே முக்கியமானது. எதிர்பாராத விதமாக விபத்தில் ஏற்படும் போது ஓரிரு நொடிகளில் ஏர்பேக் ட்ரிக்கர் ஆகிவிடும். இது மோசமான காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும். கார் பேக் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. அதேநேரம் இது நொடிகளில் டிரிக்கர் ஆவதால், அதற்கு மிக அருகே அமர்ந்திருந்தால் இது போன்ற விபத்துகளும் ஏற்படும். இதன் காரணமாகவே பொதுவாக சிறார்கள், குழந்தைகளை காரின் முன்சீட்டில் அமர வைக்கக்கூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துவார்கள். எனவே, அனைவரும் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தப்பி தவறியும் முன்சீட்டில் குழந்தைகளை அமர வைக்க வேண்டாம். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post