சென்னை: அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து இறக்கி விட்டதோடு பஸ் ஓட்டுநர், நடத்துநர்களை அறிவு கெட்ட நாயே என்று திட்டி ஏக வசனத்தில் திட்டி பேசியுள்ளார் பாஜக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பொது இடத்தில் பலரையும் நாய் என்று திட்டி அடித்தவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
படியில் பயணம் நொடியில் மரணம் என்று சொன்னாலும் யாரும் கேட்பதில்லை. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பலரும் படியில் தொங்கியபடி பயணம் செய்வதையே விரும்புவார்கள். பேருந்து, நடத்துநர்கள் கண்டித்தால் அவரையும் பல மாணவர்கள் அடித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தொங்கியபடி பயணித்து கீழே விழுந்தால் உன் உயிர்தானே போகும் என்று நினைத்துதான் பலரும் பேசாமல் அமைதியாக இருந்து விடுவார்கள்.
இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னையில் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் பலரும் தொங்கியபடி பயணம் செய்தனர். அப்போது பேருந்தை ரஞ்சனா நாச்சியார் டிரைவரை சரமாரியாக கேள்வி எழுப்பினார். பேருந்தில் இப்படி பயணிப்பவர்களை செருப்பால் அடித்திருக்கலாமே என்று ஆவேசத்துடன் கேட்டார்.
பின்னர் நேராக பேருந்தின் பின் வாசலுக்கு சென்று, படியில் ஆபத்தான முறையில் பயணித்த மாணவர்களை கன்னத்தில் சராமரியாக அந்த பெண் மாணவர்களை அறைந்ததால், சுற்றி இருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதோடு நிறுத்தியிருக்கலாம். கண்டக்டரை பார்த்து உனக்கு அறிவு இல்லையா? இப்படி படியில தொங்கறதை பாக்கறீங்களே என்று கேட்டு ஏக வசனத்தில் பேசினார். அறிவு கெட்ட நாயே என்று திட்டினார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் ரஞ்சனா நாச்சியார் சட்டத்தை கையில் எடுத்து, பேருந்து படிகட்டில் பயணம் செய்த சிறுவர்களை தாக்கியும், பேருந்து நடத்துனரையும் நாய் என்றும் திட்டியுள்ளார். காவல்துறைக்கு தகவல் தெருவிக்காமல் சட்டத்தை கையில் எடுத்த இவரை, தமிழ்நாடு காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.
கண்டிப்பது சரி..ஆனால் அடிப்பதும், நடத்துன்னரை நாய் என்பதும். அதை விளம்பரத்திர்க்கு video எடுப்பதும் சரியல்ல என்று பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.
தொங்குனது தப்புதான் பஸ் நிப்பாட்டி எல்லாத்தையும் இறக்கி விட்டது வரை கூட ஓகே, அதோட 4 வார்த்தை கடுமையான அட்வைஸ் பண்ணிருந்தாலும் சரின்னு எடுத்துக்கலாம். கடுமையா கண்டிக்கணும்னு நினைச்சாலும் பக்கத்துல இருக்குற போலீசை கூப்பிட்டும் கடுமையாக கண்டிச்சிருக்கலாம்,
என்று பதிவிட்டுள்ளா ஒருவர். ஆனா இது விளம்பர வெறில்ல அறிவு கெட்ட தனமா இந்த வேலையை பார்த்துட்டு இருக்கு என்று கேட்டிருக்கிறார் ஒரு நெட்டிசன்.
எந்த பெத்தவனும் தான் பிள்ளையை இப்பிடி ரோட்ல அடிச்சு நாயின்னு திட்டுறது எவனா இருந்தாலும் ஏத்துக்க மாட்டான். இன்னைக்கு இது பண்ணதை சரின்னு சொல்லி பயர் விடுறவங்க இதே இடத்துல ஒரு ஆம்பள அடிச்சுருந்தா ஏத்துருப்பாங்களா? இல்ல இதை முன்மாதிரியா எடுத்துக்கிட்டு நாளைக்கு நாலு பேரு இதே மாதிரி பிள்ளைகளை கண்ட இடத்தில கைநீட்டி கண்டிச்சா ஏத்துப்பாங்களா? என்று பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.
ரஞ்சனா நாச்சியாருக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை பதிவிட்டாலும் பொது இடத்தில் இப்படி நடந்து கொள்வது சரியா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.