வாஷிங்டன்: அமெரிக்காவில் 2 முறை அதிபராக இருந்த பில் கிளின்டனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டன். இவர் கடந்த 1993ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை 2 முறை அமெரிக்காவின் அதிபராக இருந்தார். இவர் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்.
தற்போது பில் கிளின்டன் தனது குடும்பத்துடன் வாஷிங்டன் டிசியில் வசித்து வருகிறார். இவருக்கு வயது 78. இந்நிலையில் தான் பில் கிளின்டனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன் டிசியில் உள்ள வீட்டில் இருந்த பில் கிளின்டன் திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து பில் கிளின்டன் வாஷிங்டன் டிசியில் உள்ள மெட்ஸ்டார் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பில் கிளின்டனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை பில் கிளின்டனின் பணியாளர்களின் துணை தலைவர் ஏஞ்சல் யுரேனா உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பில் கிளின்டன் காய்ச்சல் காரணமாக மெட்ஸ்டார் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவர் நன்றாக இருக்கிறார். அவருக்கு சிறப்பான கவனிப்பு வழங்கப்பட்டு வருகிறது'' என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட கமலா ஹாரிசுக்காக, பில் கிளின்டன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கமலா ஹாரிஸ், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பிடம் தோல்வியடைந்தார்.
மேலும் பில் கிளின்டன் கடந்த 2021ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டார். ரத்த குழாயில் தொற்று பரவல் காரணமாக அவர் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 6 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் உடல்நலம் தேறினார். அதற்கு முன்பாக என்று பார்த்தால் கடந்த 2004ம் ஆண்டில் பில் கிளின்டனுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது மேற்கொண்டது. 2010ம் ஆண்டில் 2 ஸ்டென் வைக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.