சென்னை: கடந்த 2 மாதங்கள் மேலாக திமுகவுக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையேயான சர்ச்சையை திருமாவளவன் சரியாகக் கையாண்டாரா? அல்லது சறுக்கிவிட்டாரா? என்பது குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர்.
விசிகவில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனா தான் தவெகவில் இணையப் போவது பற்றிய விளக்கத்தை தெரிவித்திருக்கிறார். தொலைக்காட்சி பேட்டிகள் மூலம் தனக்கும் விசிக தலைமைக்குமான முரண்பாடுகளை முன்வைத்து வந்த அவர், முதல் முறையாகச் செய்தியாளர்களைச் சந்தித்து இருக்கிறார்.
அப்போது அவர் தவெகவில் இணைய இருப்பது தொடர்பான கேள்விக்கு நேரடியாக விளக்கம் அளிக்கவில்லை. அதேநேரம் தவெகவில் இணையும் திட்டம் இல்லை என்று மறுக்கவும் இல்லை. அவர் அளித்த பேட்டியில், “திருமாவின் கருத்துகளை ஒரு அறிவுரையாக ஏற்றுக் கொள்கிறேன். அவருடன் தொடர்ந்து பயணிப்பேன்.
இன்று திமுக ஆட்சிக்கு எதிராக வேல்முருகன் பேசி இருக்கிறார். அவரையும் பாஜக பி டீம் என்பார்கள். சாம்சங் தொழிலாளர்களுக்காகப் போராடினால் உங்களை நக்சலைட் என்று சொல்வார்கள். மழை வெள்ளத்தில் மக்களுக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை என்று கேட்டால் உடனே சங்கி என்பார்கள்” என்றவர் தன் அடுத்த கட்ட பயணம் பற்றி விரைவில் அறிவிப்பேன் எனக் கூறியுள்ளார்.
இதற்கு விசிக தலைவர் திருமாவளவன், “அவருக்கு என் வாழ்த்துகள் என்றும் உண்டு. பொதுவாழ்வில் பொறுமையும் சகிப்புத் தன்மையும் மிகமிக முக்கியமானது. அந்த வாய்ப்பை விசிகவில் பெறுவார் என எதிர்பார்த்தேன். இந்த முடிவும் அவசரமான முடிவுதான். என் 35 ஆண்டுக்கால பொது வாழ்க்கையில் 2 நபர்கள் மீதுதான் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். அதில் ஆதவ் அர்ஜுனாவும் ஒருவர்” என்று சொல்லி இருக்கிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர்தான் ஆதவ் அர்ஜுனா திமுகவை எதிர்க்க தொடங்கினார். அவர் கூட்டணிக்குள் இருக்கிறோம் என்பதை அறிந்தே அவர் திமுகவை விமர்சித்தார். அதாவது கட்சித் தலைமை மீறிய விமர்சனமாக அது இருந்தது என்பது விசிக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தாக வெளிப்பட்டது.
ஆனால், இந்தச் சர்ச்சையில் திருமா கொஞ்சம் நிலைதடுமாறிவிட்டார் என்பதே பலரது கருத்தாக உள்ளது. மூத்த ஊடகவியலாளர்கள் தராசு ஷ்யாம் உட்படப் பலரும் அதை வெளிப்படுத்தி உள்ளனர். ஆதவ் அர்ஜுனாவுக்கு 6 மாத நீக்கம் என்பது அரசியல் அனுபவத்தில் தான் பார்க்காத ஒன்று எனவும் ஆதவ் ராஜினாமா எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் தெரிவித்த தராசு ஷ்யாம், ஆதவ் முடிவு சரிதான். ஆனால், விசிகவில் து.பொ. செயலாளர் பதவியைப் போல வேறு எந்தக் கட்சியிலும் கிடைக்காது என்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து விலக முடிவு செய்த பிறகு பல ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், விசிக மற்றும் திமுக கூட்டணி உருவாகவே தான் காரணம் என ஆதவ் பேசி இருக்கிறார். அப்படி எனில் தங்கள் கட்சிக்கு கடந்த 2021 தேர்தலில் இவர் கூடுதல் சீட்டுகளை ஒதுக்கச் சொல்லி திமுகவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை என்கிறார் விசிக எம்.எல்.ஏ. ஆன எஸ்.எஸ். பாலாஜி.
திமுக Vs ஆதவ் அர்ஜுனா இடையேயான சர்ச்சையை திருமா சரியாக டீல் செய்யவில்லை என்கிறார் டிடிவி தினகரன். நேரடியாக திமுக அதைச் சொல்லவில்லை என்றாலும், ஆ.ராசா மறைமுகமாக அதையே கூறியிருந்தார். அவர் மீது கட்சி ரீதியாக திருமா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பேட்டி அளித்தும் இருந்தார்.
டிடிவி தினகரன், “திமுக கூட்டணியிலிருந்து கொண்டு மது ஒழிப்பு மாநாடு நடத்தியது எப்படிச் சரியாகும்? எதிலும் தீர்க்கமான முடிவுகள் எடுக்கக் கூடிய திருமா சமீபகாலமாகக் குழப்பத்தில் இருக்கிறார். இந்தச் சர்ச்சையால் திமுக கூட்டணியில் திருமாவுக்கு பிரச்சினை உள்ளதோ என்ற எண்ணத்தையே மக்கள் மத்தியில் உண்டாக்கி இருக்கிறது. நெருப்பில்லாமல் புகையாது” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனால், விசிகவின் இரண்டாம் கட்டத்தலைவர்களின் கருத்து இதற்கு மாறாக உள்ளது. து.பொதுச் செயலாளர் வன்னி அரசு, “நான் 25 வருடங்களாகக் கட்சியில் இருக்கிறேன். திருமா என்ன சொல்கிறாரோ அதுவே எங்கள் முடிவு. ஆதவ் அப்படி இருக்கவில்லையே? எவ்வளவு பெரிய ஆற்றல் கொண்டவராக இருந்தாலும் தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய் கலந்து கொண்ட அம்பேத்கர் புத்த விழாவுக்கு பிறகுதான் சிக்கல் அதிகமாகிவிட்டது. ஆதவ் நீக்கப்படுவார் என பலரும் நம்ப தொடங்கினர். அதன்படியே அவர் நீக்கப்பட்டார். அந்த முடிவை மீறி திருமாவளவனால் வேறு முடிவு எடுக்க முடியாமல் போனது. சொல்லப் போனால், சர்ச்சை பேட்டிகள் பின்பு திருமாவுக்கும் ஆதவ்க்கும் தொடர்பு இருப்பதைப் போலவே தெரியவில்லை. அறைக்குள் கூடி எடுக்க வேண்டிய அனைத்தையும் பொதுவெளியில் திருமா அதிகமாகவே பேசி விட்டார் என பலரும் சொல்கிறார்கள். அவர் இதை அமைதியாக டீல் செய்யாதது பெரிய சறுக்கல் என்கிறார்கள்.
ஆதவ் அம்பேத்கர் நூல் விழாவில் விசிகவுக்கு 10% வாக்கு வங்கி இருக்கிறது என்று ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்லி இருந்தார். ஆனால், அதை மறுக்கிறார் ரவீந்திரன் துரைசாமி. “திமுக 25% தான் வாக்கு வங்கி என்று சொல்லும் ஆதவ், விசிகவுக்கு 10% வாக்குகள் உள்ளன என்கிறார்.விசிகவின் வாக்கு வங்கி 0.7% தான்” என்கிறார்.
ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் விசிக தலைவரைப் போலவே திமுக தலைமை கூட இதைக் கொஞ்சம் அதிகம் முக்கியத்துவம் அளித்துவிட்டது என்கிறார்கள் நெட்டிசன்கள். ஆதவ் பேச்சுக்கு உதயநிதி ரியாக்ட் செய்தார். அதைச் செய்திருக்கக்கூடாது என்பதே அரசியல் அனுபவம் கொண்டவர்களின் கருத்தாக இருக்கிறது.