கொடூரமான 20 நிமிடங்கள்.. அந்தக் கொடுமை யாருக்கும் வரக்கூடாது! முரளி மரணம் பற்றி அதர்வா

post-img

சென்னை: நடிகர் முரளி மாரடைப்பு ஏற்பட்டு இறந்த அன்று தங்களின் வீட்டில் 20 நிமிடங்கள் வரை நடந்த மனப் போராட்டம் குறித்து அவரது மகன் அதர்வா மனம் திறந்து பேசியுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் முரளி மாரடைப்பால் மரணமடைந்த செய்தி ஒட்டுமொத்த சினிமா துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. ஏனென்றால் இறக்கும்போது அவருக்கு வெறும் 46 வயதுதான். மிக இளம் வயதில் அவர் இறந்ததை அவரது குடும்பத்தினரால் மட்டுமல்ல; தமிழக மக்களால்கூட அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்போது அவரது பிள்ளைகள் மிகச் சிறிய வயதிலிருந்தனர். அதர்வாவுக்கு அப்போது சுமார் 20 வயதுதான் இருக்கும்.



நடிகர் முரளி 'பூவிலங்கு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இந்தப் படம் 1984இல் வெளியானது. படம் வெளியாக 5 ஆண்டுகள் கழித்து 1989இல் அதர்வா பிறந்தார். காதல் பட வரிசைகளுக்காகவே அதிக அளவு புகழைச் சம்பாதித்தவர் முரளி. 'இதயம்’, ’புதுவசந்தம்’ , ’பொற்காலம்’ ,’வெற்றிக் கொடி கட்டு’, 'அள்ளித் தந்த வானம்’ , 'சுந்தரா டிராவல்ஸ்’ எனப் பல வெற்றி படங்களில் நடித்தவர்.
முரளி ஹிட்ஸ் என தனியே ரசிகர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு வரவது பல பாடல்கள் இன்றும் மறக்கமுடியாதவையாக இருக்கின்றன. 'ஒரு ஜீவன் அழைத்தது’ என்ற பாடல் காலத்தால் அழியாத பாடலாக முரளிக்கு அமைந்து. 'இதயம்’ படத்தில் இடம்பெற்ற 'பொட்டு வைத்த ஒரு வட்டநிலா’ பாடல் அன்றைய காதல் ஜோடிகளில் இதயத்தைக் கவர்ந்ததாக இருந்தது. ரஜினி, கமல்,கார்த்திக், விஜயகாந்த் உச்ச நடிகர்கள் நடுவே தனது தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு புகழைத் தக்க வைத்திருந்தார் முரளி.
இன்னும் பல ஆண்டுகள் திரையுலகில் இருப்பார் என எதிர்பார்த்த நேரத்தில் அவரது மரணம் திடீரென்று நடந்தது. மாரடைப்பு காரணமாக வீட்டிலேயே மயங்கி விழுந்த முரளி தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு போவதற்குள் மரணத்தைத் தழுவி இருந்தார். முரளியின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவியோ அல்லது மகன் அதர்வா என யாரும் பெரிய அளவில் ஊடகத்தில் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை. பெரிய அதிர்ச்சியில் உறைந்துபோன குடும்பத்தினர் பல ஆண்டுகளாக அமைதியாகவே இருந்துவிட்டனர்.

இந்நிலையில்தான் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள முரளியின் மகனும் நடிகருமான அதர்வா, அப்பாவின் மரணத்தின் போது என்ன நடந்தது என்பதைப் பற்றி விரிவாக மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில் அப்பாவுக்கு அன்று என்ன நடந்தது என்பதையும் தான் எப்படி செயலற்று முடங்கிப் போனேன் என்பதையும் கூறியிருக்கிறார்.
“அன்றைக்கு அக்காவின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி வீட்டில் நடந்தது. உறவினர்கள் அனைவரும் வீட்டிலிருந்தனர். நாங்கள் தூங்கப் போவதற்கே விடியற்காலை ஆகிவிட்டது. என் அறைக்குப் பக்கத்தில்தான் அப்பா அறை இருந்தது. நான் தூங்கப் போன கொஞ்ச நேரத்தில் என் அறைக்கதவைத் தட்டி அழைத்தார்கள். எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. 20 நிமிடம் ஒன்றுமே புரியாமல் அப்படியே சாய்ந்து உட்கார்ந்து விட்டேன்” என்று கூறி இருக்கிறார்.
அவரது தந்தை இரவு 3 மணி அளவிலேயே இறந்துவிட்டிருக்கிறார். அறையில் தூங்கப் போனவரின் உயிர் படுக்கையிலேயே பிரிந்துள்ளது. அதிகாலை 5 மணிக்குத்தான் அதர்வா உள்ளிட்ட குடும்பத்தினர் அதை உணர்ந்துள்ளனர். இரவு முழுக்க வீட்டில் விஷேசம் என்பதால் அனைவரும் அந்த அசதியிலிருந்துள்ளன. படுக்கையில் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்த முரளியை முதல் மாடியில் உள்ள அவரது அறையிலிருந்து தனியாளாக தூக்கிக் கொண்டு கீழே இறங்க முடியாமல் தவித்துள்ளார். அவருடன் அவரின் அம்மா மட்டுமே இருந்துள்ளார். எப்படியோ போராடி காரில் கொண்டு வந்து அவரை அமர்த்தி, தனியார் மருத்துவமனைக்கு அவரே காரை ஓட்டிக் கொண்டு சென்றுள்ளார். வழி நெடுக்க தந்தையில் நிலையைப் பதற்றத்துடன் பார்த்தபடி வாகனத்தைச் செலுத்தி இருக்கிறார்.

ஆனால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்தப் பதற்றத்தில் ஆம்புலன்ஸ் வண்டியை அழைக்கலாம் என்பது கூட தனக்கு நினைவுக்கு வரவில்லை என்றும் நான் குழம்புப் போய் அப்படியே நிதானம் இழந்து பாத் ரூமில் உட்கார்ந்துவிட்டேன் எனவும் பேசி உள்ள அதர்வா, தன் வாழ்நாளில் அந்த 20 நிமிடங்கள் மிகக் கொடூரமானவை. அந்த வலியைப் போல் ஒன்று எந்த ஒரு நபரின் வாழ்க்கையிலும் வரவே கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன் என்றும் மிக உருக்கமாகப் பேசி இருக்கிறார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே 5 ஆண்டுகள் அவருக்குப் பிடித்துள்ளது. எனவேதான் அப்பாவை பற்றிப் பேசினாலே எனக்குப் பயம் வந்துவிடும். அதைத் தவிர்த்துவிடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post