டெல்லி: அமித்ஷாவின் ராஜினாமா கோரி எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி செய்த நிலையி் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவுக்கு வந்தது. எதிர்க்கட்சிகளின் அமளியால் இன்று லோக்சபா, ராஜ்யசபா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருப்பவர் அமித்ஷா. இவர் ராஜ்யசபாவில் பேசியபோது எதற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர் என்று சொல்வது பேஷனாகிவிட்டது என்று கூறினார். இது சர்ச்சையை கிளப்பியது.
அமித்ஷா மன்னிப்பு கோரி தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டத்தில் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்பிக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் பாஜக எம்பிக்கள் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோரின் தலையில் காயம் ஏற்பட்டது. ராகுல் காந்தி அவர்களை தள்ளிவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராகுல்காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து காங்கிரஸ் எம்பிக்கள் விஜய் சவுக் பகுதியில் இருந்து பதாகைகளுடன் இன்று பேரணியாக புறப்பட்டு நாடாளுமன்ற வளாகத்தை அடைந்து அமித்ஷாவை ராஜினாமா செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.
அதேபோல் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தை தொடங்கினர். இதனால் போட்டி போட்டி இருதரப்பினரும் போராட்டம் செய்தனர். அதன்பிறகு இரு அவைகளும் கூடியது.
லோக்சபா தொடங்கியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் அமித்ஷாவுக்கு எதிராக கோஷமிட்டனர். அதேபோல் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் ராகுல் காந்திக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் லோக்சபாவில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து லோக்சபாவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டார்.
அதேபோல் ராஜ்யசபாவிலும் காலையில் சபை தொடங்கியதும் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் அமித்ஷாவுக்கு எதிராக கோஷமிட்டனர். சபை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜ்யசபாவை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்தார். அதன்பிறகு மீண்டும் மதியம் 12 மணிக்கு சபை தொடங்கியது. அப்போதும் எதிர்க்கட்சிகளும், பாஜக மற்றும் அதன் கூட்டணி எம்பிக்களால் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து ராஜ்யசபாவும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.