புதுவை: புதுவையில் அரசு ஹோட்டலை விலைக்கு கேட்டதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அது போல் எதுவும் நடக்கவில்லை என புதுவை சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் விளக்கியுள்ளார்.
இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் படப்பிடிப்பு நடத்துவதற்காக புதுவையில் சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசினார்.
அப்போது கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான சீகில்ஸ் ஓட்டலை தமக்கு விலைக்கு தருமாறு கேட்டராம். மேலும் அப்படி இல்லாவிட்டாலும் ஒப்பந்த முறையிலாவது தர முடியுமா என கேட்டுள்ளார். இதனால் அமைச்சர் அதிர்ச்சி அடைந்து அரசுக்கு சொந்தமான இடத்தை தனியாருக்கு விற்பனையோ அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ வழங்க முடியாது என தெரிவித்தாராம்.
மேலும் புதுவையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இசை நிகழ்ச்சி நடத்த இடம் கிடைக்குமா என அமைச்சரிடம் விக்னேஷ் சிவன் கேட்ட போது துறைமுக வளாகத்தில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் இசை நிகழ்ச்சி நடத்தலாம் என அமைச்சர் தெரிவித்தாராம்.
அரசு ஹோட்டலையே விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டாராமே என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வந்த நிலையில் அவரே இதற்கு விளக்கமும் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: புதுவை விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கவே சென்றேன்.
அப்போது மரியாதை நிமித்தமாக முதல்வர் ரங்காசமி, அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்தேன். அப்போது என்னுடன் வந்திருந்த மேலாளர் தனிப்பட்ட முறையில் அமைச்சரிடம் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தில் என்னை பற்றி வெளியான மீம்ஸ் நகைச்சுவையாக இருந்தது என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன், அரசு ஹோட்டலை விலைக்கு கேட்டாரா என்பது குறித்து அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அரசு ஹோட்டலை இயக்குநர் விக்னேஷ் சிவன் நேரடியாக என்னிடம் விலைக்கு கேட்கவில்லை. அவருடன் வந்த உள்ளூர் நபர்தான் அது போல் கேட்டார். அரசு சொத்தை யாராலும் விற்க முடியாது என கண்டித்தேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்திருந்தார்.