சென்னை: கர்நாடக இசைக் கலைஞர் டிஎம் கிருஷ்ணா கச்சேரிக்கு இன்று மியூசிக் அகாடமியில் அரங்குக்கு வெளியே கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. மியூசிக் அகாடமி சார்பில் இன்று நடந்த இந்த கச்சேரியில் ஏராளமானோர் நேரில் பங்கேற்று டிஎம் கிருஷ்ணாவின் இசைக் கச்சேரியைக் கேட்டு ரசித்துள்ளனர்.
கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, சென்னை மியூசிக் அகாடமியில் இன்று இசைக் கச்சேரி நிகழ்த்தினார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, மெட்ராஸ் மியூசிக் அகாடமியின் மார்கழி இசை விழாவில் தனது கச்சேரியை அரங்கேற்றி, இசை ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார் டிஎம் கிருஷ்ணா. இந்தக் கச்சேரியைக் காண, அரங்குக்கு வெளியிலும் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. அரங்கில் இடம் கிடைக்காதவர்கள், லாபியில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி திரையில், டிஎம் கிருஷ்ணாவின் கச்சேரியைப் பார்த்தும், கேட்டும் ரசித்துள்ளனர்.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், மாதம் முழுவதும் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறது மெட்ராஸ் மியூசிக் அகாடமி. இந்த ஆண்டுக்கான சீசன் தொடங்கி உள்ள நிலையில், மியூசிக் அகாடமியில் இசைக் கச்சேரியை இன்று நடத்தி உள்ளார் டிஎம் கிருஷ்ணா. இந்த இசைக் கச்சேரியைக் காண பல நூறு பேர் வந்துள்ளனர். இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டி.எம். கிருஷ்ணாவின் கச்சேரி உண்மையிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. டிஎம் கிருஷ்ணா கச்சேரியை தொடங்கியபோது கரகோஷத்தோடு வரவேற்ற பார்வையாளர்கள், கச்சேரியை அவர் முடித்தபோது, எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார். கர்னாடக இசைக்கு வெளியிலும், இளைஞர்களையும் பார்வையாளர்களை ஈர்க்க முடியும் என்றால், அது டிஎம் கிருஷ்ணா மட்டுமே என இந்து என்.ராம் தெரிவித்துள்ளார்.
சென்னை மியூசிக் அகாடமியில் ஒரு பிரிவினர், டிஎம் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்திருந்த நிலையில், இன்று நடந்த இசைக் கச்சேரியில், டிஎம் கிருஷ்ணாவின் இசையையும் பாடலையும் கேட்க ஏராளமானோர் குவிந்து, ஆதரவு அளித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சமூக கருத்துக்களையும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார் இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா. அதற்காக சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்த ண்டு இவர் தேர்வு செய்யப்பட்டார். அது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சை வெடித்தது.
கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் தங்கள் எக்ஸ் பக்கத்தில், “கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி, பிராமண சமூகத்தின் உணர்வுகளை இழிவுபடுத்தியவர் டி.எம் கிருஷ்ணா. அவர் ஆன்மிகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார். ஈ.வெ.ரா எனப்படும் பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார். பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறோம்” என அறிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இரு தரப்பாக மோதல் நடந்தது. டி.எம் கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகள் காரணமாகவும், அவர் கர்நாடக சங்கீதத்தை எளியோருக்கும் கொண்டு செல்வதற்காக தொடர்ந்து பேசி வருவதாலும் காழ்ப்புணர்ச்சியில் எதிர்ப்பு கிளம்பியதாக டிஎம் கிருஷ்ணா ஆதரவாளர்கள் விமர்சித்தனர்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.