சென்னை: பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாகர்மித்ரா பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என தமிழக மீன்வளம் மற்றுமு் மீனவர் நலத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது சென்னையில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாகர் மித்ரா பணியாளர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
காலியிடங்கள்: பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (பிஎம்எம்எஸ்ஒய்) கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ/வருவாய் கிராமங்களுக்கு பல்நோக்கு சேவை பணியாளர்கள் (சாகர் மித்ரா) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எவ்வளவு இடங்கள் நிரப்பப்பட உள்ளது என்பது பற்றிய விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.
கல்வித் தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் முதுகலை/இளங்கலை பிரிவில் மீன்வள அறிவியல் (Fisheries Science), கடல் உயிரியல் ( Marine Biology), விலங்கியல் (Zoology) படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் மதுகலை/இளங்கலை படிப்பில் வேதியியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, இயற்பியல் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தகவல் தொழில்நுட்பம் குறித்து தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு: பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பானது 31.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் விண்ணப்பத்தாரர்கள் பணி சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் வருவாய் கிராமங்களில் வசிக்க வேண்டும். அதன்படி இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சென்னை மாவட்டத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். மேலும் தமிழில் உரையாட தெரிந்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: இது ஒரு தற்காலிக பணியாகும். விண்ணப்பத்தாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தான் பணியமர்த்தப்படுவார்கள். மாதம் ரூ.15 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை ‛‛மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண் 77, சூரியநாராயணா செட்டி தெரு, இராயபுரம், சென்னை -13'' என்ற முகவரில் பெற்று பூர்த்தியிட்டு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபாலில் அதே முகவரிக்கு அக்டோபர் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். சந்தேகம் இருப்பின் 9384824245/9384824407 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.