ஏலத்திற்கு வந்த வீடு.. வறுமையில் வாடும் எம்.ஜி.ஆரின் பிஏ: காப்பாற்றுவாரா எடப்பாடி?

post-img
சென்னை: எம்.ஜி.ஆரிடம் 15 ஆண்டுகாலம் உதவியாளராக இருந்தவர் இப்போது கடன் சுமையால் வங்கியில் அடமானம் உள்ள வீட்டைக் கூட மீட்க முடியாமல் வறுமையில் வாடி வருகிறார். எம்.ஜி. ஆர் மறைந்து 37 வருடங்கள் மறைந்துவிட்டாலும் அவர் தொடங்கி வைத்து அஇஅதிமுக இன்றுவரை மக்கள் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்து வருகிறது. புதியதாக அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் விஜய்க்கு கூட எம்.ஜி.ஆர் செல்வாக்கு தேவைப்படுகிறது. ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் படங்களை மட்டுமே திரையிட்டுப் பல லட்சங்களைச் சம்பாதித்த திரையரங்குகள் இருந்தன. அவர் தமிழக அரசியலில் அசைக்கமுடியாத ஒரு தலைவராக இன்றும் போற்றப்படுகிறார். அவரைப் பற்றிய கதைகளை மக்கள் கேட்பதற்கு தயாராக இருக்கின்றனர். அந்தளவுக்கு மக்களை இழுக்கும் ஒரு கவர்ச்சி அவரிடம் இருந்து வருகிறது. எம்.ஜி,ஆர் மனைவி வி.என்.ஜானகியின் நூற்றாண்டு விழா எடப்பாடி பழனிசாமி தலைமையில் சமீபத்தில்தான் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர் காலத்தில் அவரிடம் உதவி பெற்றவர்கள் இன்று மிகப் பெரிய தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். கல்வித் தந்தைகளாகப் பல லட்சம் கோடிக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள். ஆனால், அவருடன் 15 ஆண்டுகள் நிழல் போல பின் தொடர்ந்து வந்த அவரது உதவியாளர் மகாலிங்கம், இப்போது கடன் சுமையால் தத்தளித்து வருகிறார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. அவருக்கு அதிமுக தலைமையில் உள்ள யாரும் உதவவில்லை என்று அவர் மனம் வருந்தி பேசி இருக்கிறார். எம்ஜிஆருடன் நெருக்கமாக இருந்தவர் இவரது தந்தை கருப்பையாதான். இவர் 1972இல் இறந்த பின் அவரது மகன் மகாலிங்கத்தை எம்.ஜி.ஆர். தன்னுடன் வைத்துக்கொண்டார். திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரை நீக்கியபோது இவருக்குத்தான் முதன்முதலாக இந்து பத்திரிகை நிருபர் தொலைபேசி செய்து சொல்லி இருக்கிறார். அதற்கு எதிர்வினை என்ன எனக் கேட்டுச் சொல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது எம்.ஜி,ஆர் 'நேற்று இன்று நாளை' படப்பிடிப்பிலிருந்துள்ளார். அவருக்கு மகாலிங்கம் மூலம் தகவல் போய் உள்ளது. அதற்கு எம்ஜிஆர் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை. உதவியாளர் உங்கள் ரியாக்‌ஷன் என்ன? எனக் கேட்க சொன்னார்கள் என்றதற்கு 'பாயாசம் சாப்பாட்டு கொண்டிருக்கிறேன் என்று சொல்' என எம்.ஜி.ஆர் பதிலடி கொடுத்துள்ளார். அதன் பின் அதிமுக உருவானது உலகம் அறிந்த விசயம். இவரது சகோதரர் சாமிநாதனுக்கு தலைமைக் கழகத்தில் வேலை போட்டு கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஜானகியின் குடும்பம் கட்சிக்குள் வந்த பிறகு இவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார். 'ஜெயலலிதாவைச் சந்தித்து இருக்கிறேன். ஆனால், அவரிடம் எந்த உதவியும் எதிர்பார்த்தது இல்லை. அவரும் செய்தது இல்லை' என்கிறார் மகாலிங்கம். மகாலிங்கம் அளித்துள்ள ஒரு பேட்டியில் தான் மிகவும் கடன் சுமையால் தத்தளிப்பதாகக் கூறியுள்ளார். இவர் கஷ்டப்படுவதை அப்துல்கலாம் உதவியாளர் பொன்ராஜ் தான் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு போட்டு, 'எம்.ஜி.ஆர். உதவியாளரையே காப்பாற்ற முடியாதவர்கள் அதிமுகவை எங்கே காப்பாற்றப் போகிறார்கள்?' என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்குச் சமீபத்தில் ஒரு விவாதத்தில் கலந்துகொண்ட ஜவஹர் அலி, 'எம்.ஜிஆர். உதவியாளரை ஜானகி விழாவுக்கு அழைத்து பொன்னாடை போட்டு கௌரவித்தோம்' என்று விளக்கம் அளித்திருந்தார். ஆனால், அந்தத் தகவல் பொய்யானது என்றும் தன்னை யாரும் அழைக்கவில்லை என்றும் மகாலிங்கம் மறுத்துள்ளார். "எம்.ஜி.ஆர் இறந்து 35 ஆண்டுகள் மேல் ஆகிவிட்டன. அவர் செய்த உதவியை வைத்துத்தான் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம். செய்த வியாபாரம் நஷ்டமாகி விட்டது. அதன்பின் அன்றாட சாப்பாட்டுக்கே பிரச்சினையாகிவிட்டது. அதிமுகவிலிருந்து யாரும் உதவவில்லை. பல முறை மனு கொடுத்தும் பலன் இல்லை" என்று தி டிபேட் சேனலுக்கு அளித்த பேசி இருக்கிறார் மகாலிங்கம். இவரது சொத்துகள் வங்கியில் அடமானம் இருக்கின்றன. அதை மீட்க முடியாமல் தவிக்கிறார் மகாலிங்கம். வங்கியில் ஜப்தி நோட்டீஸ் வந்துவிட்டது. அவர் குடியிருக்கும் வீட்டுக்கே பிரச்சினை. ஊருக்கே வாரி வாரி வழங்கிய வள்ளல் எம்ஜிஆரின் உதவியாளர் தன் உணவுக்கே கஷ்டபடுகிறார் என்று செய்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. பெரிய ஊகங்களில் இந்தச் செய்து அடிபட்ட ஆரம்பித்த பிறகும் அவர் மவுனமாக இருக்கிறார் என்பது எம்.ஜிஆர். விசுவாசிகளின் வருத்தமாக இருக்கிறது. ஆனால், தனக்கு அதிமுக உதவவில்லை என்பதால் அந்தக் கட்சியின் தலைமையைக் குறைசொல்லக்கூட மறுக்கிறார் இந்த மகாலிங்கம். வரும் டிசம்பர் 24 ஆம் தேதி எம்.ஜி.ஆரின் நினைவுநாள் வருகிறது. அதற்குள் இவர் வாழ்க்கைக்கு ஒரு விடிவுகாலம் வருமா?

Related Post