சென்னை; ஆதவ் அர்ஜுனா விசிகவைவிட்டு விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துள்ளார் என்று சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
விசிகவில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா, தான் முற்றிலுமாக கட்சியை விட்டு விலகுவதாக நேற்று அறிவித்திருந்தார். அவர் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி வந்ததை வைத்து, 'ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏதோ ஒரு மறைமுக திட்டம் இருக்கிறதோ? என்று சந்தேகம் எழுகிறது' என்று திருமாவளவன் கூறியதைத் தொடர்ந்து ஆதவ் இந்த முடிவை அறிவித்திருந்தார்.
கடந்த இரண்டு மாதமாக ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள் பற்றி அவர் கட்சித் தலைமைக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர் பொதுவெளியில் அதை வெளிப்படையாகவே கூறிவந்தார். எக்ஸ் தளத்தின் மூலம் கட்சிக்கு விளக்கம் அளித்தார்.
ஆனால், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்குத்தான் அவர் விளக்கம் அளிக்கவேண்டும். இப்படி வெளிப்படையாகப் பேசக் கூடாது. அவரை கட்சியை விட்டு நீக்கம் எண்ணம் எங்களுக்கு இல்லை. அவர் விளக்கம் அளித்திருந்தால் அவரை மீண்டும் இணைத்துக் கொண்டிருப்போம். அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது என்று ஆதவ் விலகல் பற்றிப் பேசி இருந்தார் திருமாவளவன்.
இந்நிலையில் அவர் அடுத்த எந்தக் கட்சிக்குச் செல்வார்? விஜய்யுடன் இணைந்து பயணிக்கலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவர் அதிமுக பக்கம் போகலாம் என்றே தெரியவருகிறது. பலரது ஊகங்கள் அப்படித்தான் உள்ளன. அதை வலுப்படுத்து விதமாக விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ஒரு தகவலைக் கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் "திமுக அமைச்சர் எ.வ.வேலு மூலமாக திருமாவளவனுக்கு 'அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா'வுக்கு செல்ல வேண்டாம் என அழுத்தம் தகவல் கொடுக்கப்பட்டதாக ஆதவ் அர்ஜுனா சொல்கிறர். அது எப்படி அவருக்குத் தெரியும்? அவர் பக்கத்தில் இவர் இருந்தாரா? அப்படி என்றால், நான் சொல்கிறேன் "ஆதவ் அர்ஜுனா எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வந்துவிட்டுத் தான் இந்த மாதிரியான சர்ச்சைகளைக் கிளப்பினார்?' என்று நான் சொல்லட்டுமா? அவர் சொல்வது உண்மை என்றால் நான் சொல்லுவதும் உண்மை என்று எடுத்துக் கொள்ளலாமா?
தனிப்பட வகையில் ஆதவ் அர்ஜுனாவின் உரையாடல்கள் என்னிடம் இருக்கிறது. அதை நான் கட்சியின் நலன் கருதி சொல்லம்மட்டேன். விசிக மதுரையில் கொடி ஏற்ற முடியாத பிரச்சினை ஏதோ இன்று வந்தது அல்ல. அதைப்போன்று 25 வருடங்களாகப் பல பிரச்சினைகள் நாங்கள் சந்தித்திருக்கிறோம். அர்ஜுனுக்கு இது பற்றி எப்போது தெரியும்? எம்பி சீட்டு கேட்டுக் கிடைக்காத பின்னர்தான் தெரியுமா?
என் பெயரில் வழக்கு இருக்கிறது . ஆளூர் ஷாநவாஸ் பெயரில் வழக்கு உள்ளது. சிந்தனை செல்வன் மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. அதை எல்லாம் தாண்டிதான் இன்று சட்டமன்ற உறுப்பினராகி இருக்கிறோம். திமுக சொல்லி எங்களுக்குச் சீட்டு தரப்படவில்லை. 2016 இதே திமுகவை எதிர்த்துத்தான் விசிக போட்டியிட்டது. ஏதோ ஆதவ் வந்த பிறகுதான் நாங்கள் வெற்றி பெறவில்லை" என ஆதங்கத்தோடு சவுத் பீட் சேனனுக்கு அளித்துள்ள பேட்டியில் அடித்துப் பேசி இருக்கிறார்.
திருமாவளவன் கடந்த 25 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கட்சி நடத்தி வருகிறார் என்றும் அப்போது இந்த விசயம் ஆதவ்க்கு தெரியாதா என்றும் திடீரென்று ஒரு வருடம் முன்பாக கட்சிக்கு வந்தவர் தலித் தலைமை பற்றி இவ்வளவு ஆதங்கம் கொள்ளும் இவர் கடந்த 2021 திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கும் அதிகாரத்திலிருந்த போது கூடுதல் சீட்டு கேட்டு ஒதுக்கிக் கொடுத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.