ஹைதராபாத்: புஷ்பா 2 ரசிகை மரண வழக்கில் அல்லு அர்ஜுன் பெயிலை ரத்து செய்ய தெலுங்கானா காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி அல்லு அர்ஜுன் பெயிலை ரத்து செய்யும் படி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை எதிர்த்து முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இப்போது அல்லு அர்ஜுனின் பேட்டியை காரணம் காட்டி அவரின் பெயிலை ரத்து செய்ய கோரிக்கை விடுக்க உள்ளனர்.
அவருக்கு தரப்பட்ட பெயில் படி.. அவர் இந்த வழக்கு பற்றி பேசக்கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிபந்தனைகளை அவர் சமீபத்தில் மீறிவிட்டார். என்னுடைய இமேஜ் போய் விட்டது. புஷ்பா 2 படத்தின் வெற்றியை கூட நான் கொண்டாடவில்லை என்றெல்லாம் அல்லு அர்ஜுன் பேட்டி கொடுத்திருந்தார். இந்த நிலையில்தான் அல்லு அர்ஜுனின் பேட்டியை காரணம் காட்டி அவரின் பெயிலை ரத்து செய்ய கோரிக்கை விடுக்க உள்ளனர்.
என்ன நடந்தது?: டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 வயது பெண் உயிரிழந்தது மற்றும் அவரது மைனர் மகன் பலத்த காயம் அடைந்தது தொடர்பாக சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். பொதுமக்களை கட்டுப்படுத்த தியேட்டரில் தெலுங்கானா போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும், பிரீமியர் காட்சிக்கு முன்னதாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அந்த இடத்திற்கு வந்தபோது, அவரது ரசிகர்கள் வெறித்தனமாகச் அவரை பார்க்க அருகில் சென்றனர்.. இதனால் நிலைமை கட்டுப்பாட்டை மீறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
ஒரு பெரிய சினிமாவிற்கு.. அதிலும் ரசிக வெறி கொண்ட ஒரு சினிமா உலகில்.. படம் ரிலீஸ் ஆகும் நாளில் பிரிமியர் ஷோவை பார்க்க வெளிப்படையாக செல்வது என்பது எவ்வளவு தவறான விஷயம். ஆனால் அந்த இங்கீதம் கூட இல்லாமல் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றது பெரிய அளவில் சர்ச்சையானது.
அதிலும் அர்ஜுன் வெறுமனே படத்தைப் பார்த்து விட்டுச் செல்லவில்லை. அவர் காரின் சன்ரூஃப்பில் இருந்து வெளியே வந்தார், தனது திரைப்படத்தின் வெளியீட்டைக் கொண்டாடிய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார், வாழ்த்தினார். இதனால் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது. இந்த கூட்ட நெரிசலில்தான் ரேவதி என்ற பெண் பலியானார். 9 வயதே கொண்ட அவரின் மகன் ஸ்ரீ தேஜா மூச்சு பாதிப்பு ஏற்பட்டு கோமாவில் உள்ளார்.
இதற்காக கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் உடனே ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவரை கைது செய்ய ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது.
அல்லு அர்ஜுன் வீட்டில் இருந்து கைது செய்து அழைத்து வரப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அதன்பின் 50,000 ரூபாய் பத்திரத்தில் அவருக்கு 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும், ஆவணங்கள் தாமதமானதால் அவர் ஒரு இரவை மட்டும் அவர் சிறையில் கழித்தார்.
சிறையில் இருந்து வெளியே வந்த அல்லு அர்ஜுனை பார்க்க பல நடிகர்கள்.. முன்னணி ஹீரோக்கள் அவரின் வீட்டிற்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.