மதுரை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம். அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் திமுகவுக்வோ, எனக்கோ இல்லை என்று அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்.
விகடன் பதிப்பகம் சார்பில் அண்மையில் நடைபெற்ற எல்லோருக்குமான அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில், தவெக தலைவர் விஜய், விசிக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், திருமாவளவன் பங்கேற்கவில்லை என்று அறிவித்திருந்தார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா திமுக குறித்து பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இதையடுத்து, கட்சியில் இருந்து 6 மாதம் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து தான் நிரந்தரமாக விலகுவதாக ஆதவ் அர்ஜுனா திடீரென அறிவித்தார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், தான் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான பின்னணியில் திமுக உள்ளது. திமுக அமைச்சர் எ.வ.வேலு திருமாவளவனுக்கு கடும் அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் மறுப்பு தெரிவித்திருந்தார். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது என்று எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. எந்த அழுத்தத்தாலும் என்னை இணங்க வைக்க முடியாது. நான் அது சுதந்திரமாக எடுத்த முடிவுதான் என்று திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் எவ வேலு மதுரையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, "எல்லோருக்குமான அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க கூடாது என ஆதவ் அர்ஜுனா கூறுவதுபோல எந்தவொரு அழுத்தத்தையும் திருமாவளவனுக்கு நான் கொடுக்கவில்லை.
2001 இல் மங்களூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று திருமாவளவன் சட்டமன்றத்திற்கு வந்தபோது அவருடைய பக்கத்து இருக்கையில் தான் நான் இருந்தேன். அன்று முதல் எனக்கும் அவருக்கும் நட்பு என்பதைத் தாண்டி என்னுடன் சகோதர பாசத்துடன் எந்த காலகட்டத்திலும் பழகக் கூடியவர் திருமாவளவன்.
இடைப்பட்ட காலங்களில் எதிர்முகம் என்ற நிலை எடுத்தபோது கூட என்னுடன் நன்றாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். நட்புக்குரியவர் திருமாவளவன். அவர் என்னுடன் பேசுகிறார் என்பதற்காக நான் அழுத்தம் கொடுக்கிறேன் என்பது பொருள் அல்ல. அப்படி எந்தவொரு அழுத்தத்தையும் நான் கொடுக்கவில்லை. அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.
அழுத்தம் கொடுத்துதான் அவர் ஒரு முடிவெடுக்க வேண்டும் என்ற நிலை எதுவும் இல்லை. திருமாவளவன் ஒரு அறிவாளி. அரசியலில் தொலைநோக்குப் பார்வை கொண்டவர். அரசியலைப் பற்றி நன்கு புரிந்து கொண்டவர். அவருக்கு இன்னொருவர் வந்து அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. அவர் சுயமாக முடிவெடுப்பதற்கு அந்த கட்சியில் அவருக்கு உரிமை உண்டு.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். அவர் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து எ.வ.வேலு திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்கிறேன் என்கின்றனர். நான் அவருடன் 2021 இல் இருந்து பழகிக் கொண்டிருக்கிறேன். அதற்காக என்ன ஆதவ் அர்ஜுனாவிடம் சென்று அனுமதியா கேட்க முடியும் அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கும் இல்லை. எனக்கும் இல்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை" என்றார்.