மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்: மாணவர்கள் படுகொலை-விடிய விடிய போராட்டம்

post-img

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 'மைத்தேயி' இனக்குழு மாணவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அம்மாநிலத்தில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இதனையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் இணையசேவை மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி, குக்கி இனக்குழுக்களிடையே கடந்த மே மாதம் மோதல் வெடித்தது. இந்த மோதல் பல மாதங்களாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மணிப்பூர் வன்முறை: மணிப்பூர் அரசு புள்ளி விவரப்படி சுமார் 200 பேர் இம்மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறி அகதிகளாக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஆளும் மாநில பாஜக அரசும் மத்தியில் ஆளும் பாஜக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி இருந்தன. மேலும் மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை பேச வைப்பதற்காகவே மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி கொண்டும் வந்தது.
உச்சநீதிமன்றம் தலையீடு: மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக உச்சநீதிமன்றமும் தலையிட்டுள்ளது. இந்த வன்முறைகள் தொடர்பாக ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் குறித்து சிபிஐ குழு விசாரணை நடத்துகிறது.
மணிப்பூர் மாணவர்கள் படுகொலை: இந்நிலையில் மணிப்பூரில் மைத்தேயி இனக்குழுவை சேர்ந்த 2 மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர். இந்த 2 மாணவர்களும் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் மணிப்பூரில் ஏற்படுத்தி உள்ளது.
வெடித்தது போராட்டம்: இரண்டு மாணவர்கள் படுகொலைக்கு எதிராக மணிப்பூரில் மீண்டும் போராட்டம் வெடித்தது. தலைநகர் இம்பாலில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்று திரண்டு முதல்வர் பைரேன் சிங் இல்லத்தை முற்றுகையிட முயற்சித்தனர். மணிப்பூர் மாநிலத்தில் பல பகுதிகளில் நள்ளிரவிலும் இந்தப் போராட்டம் நீடித்தது. போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். இந்தப் போராட்டம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் மணிப்பூரில் கல்வி நிறுவனங்கள் 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

சிபிஐ குழு வருகை: இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் தமது எக்ஸ் பக்கத்தில், மாணவர்கள் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ குழு இம்பால் வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வ்ருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
 மணிப்பூர் வன்முறை: 3 பெண் நீதிபதிகள் குழு- வெளி மாநில அதிகாரிகள் விசாரணை- உச்சநீதிமன்றம்!
இணையசேவை துண்டிப்பு: இதனிடையே மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் மே மாதம் முதல் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. இந்த பிரச்சனையிலும் உச்சநீதிமன்றம் தலையிட்டது. கடந்த 23-ந் தேதிதான் மணிப்பூர் மாநிலத்தில் முழுமையாக இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டது. தற்போது மாணவர்கள் படுகொலை காரணமாக வன்முறை பரவாமல் இருக்க அடுத்த 5 நாட்களுக்கு மணிப்பூரில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது.

Related Post