திருநெல்வேலி: திருநெல்வேலியில் உள்ள நீதிமன்றத்தின் நுழைவு வாயிலில் மாயாண்டி என்பவரை ஒரு கும்பல் நேற்று பட்டபகலில் பல பேர் முன்னிலையில் தீர்த்துக்கட்டியது. இதை கண்டு ஆடிப்போன வக்கீல்கள் நேற்று பாதுகாப்பு குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பி நேற்று பேட்டி அளித்தனர். இந்த சூழலில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம், சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி அருகே கீழநத்தம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் என்பவருடைய மகன்கள் மாரிசெல்வம் (வயது 25), மாயாண்டி என்ற பல்ல மாயாண்டி (23). மாயாண்டி மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டை தாலுகா போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தார்கள். அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராவதற்காக நேற்று காலையில் மாயாண்டி தனது அண்ணன் மாரிசெல்வம் உள்ளிட்டவர்களுடன் திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு வந்தார்.
சிறிது நேரம் நீதிமன்றத்தில் இருந்த மாயாண்டி பின்னர் கடைக்கு செல்வதற்காக நீதிமன்றத்திற்கு வெளியே சென்றார். அதன்பிறகு அங்கிருந்து மீண்டும் நீதிமன்றத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கொண்ட மர்மகும்பல் வந்து இறங்கியது. அவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மாயாண்டி தப்பித்து ஓடினார். ஆனாலும் அவரை சுற்றி வளைத்த 3 பேர் கோர்ட்டு முன்னே அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள்.
இதில் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மாயாண்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் காரில் ஏறி தப்பி செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்த வக்கீல்கள் சிலரும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உய்க்காட்டானும் கும்பலைச் சேர்ந்த ஒருவரை மடக்கி பிடித்தனர். மாயாண்டியை வெட்டிக்கொன்ற 3 பேரும் தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றனர். மற்ற 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்கள்.
இந்த கொலை சம்பவம் குறித்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் நேற்று மாலையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அப்போது, மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன்முகமது ஜின்னா, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், மாநில அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.
அவர்களிடம் நீதிபதிகள், மாவட்ட அளவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தோம். ஆனால், திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் வாலிபரை ஒரு கும்பல் கொலை செய்துள்ளது என்றும், சம்பவ இடத்தில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் என்று 25 போலீசார் இருந்தும் கொலையை தடுக்கவில்லை என்றும் தகவல் வந்துள்ளது என்று நீதிபதிகள் கூறினார்கள்.
அதற்கு மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன்முகமது ஜின்னா கூறும் போது, "முன்பகை காரணமாக இந்த கொலை நீதிமன்றத்திற்கு வெளியில் 100 மீட்டர் தூரத்தில் நடந்துள்ளது. நீதிமன்ற வளாகத்துக்குள் நடக்கவில்லை. இந்த கொலையில் ஒருவரை போலீசார் பிடித்து விட்டனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள். குற்றவாளிகளை விரைவில் போலீசார் பிடித்து விடுவார்கள்" என்றார்.
உடனே உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர், "அந்த ஒரு நபரையும் வக்கீல்கள்தான் பிடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. நாங்கள் குற்றவாளிகளை போலீசார் தேடி பிடிப்பது குறித்து எதுவும் கூறவில்லை. ஏன் குற்றத்தை தடுக்கவில்லை என்று தான் கேட்கிறோம். போலீசார் துப்பாக்கியை பயன்படுத்தியிருந்தால், கொலையை தடுத்து இருக்கலாம்.
நீதிமன்றம் முன்பு நின்ற போலீசார் துப்பாக்கி வைத்திருக்கவில்லையா? உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும்தான் போலீஸ் பாதுகாப்பு உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அதை போலீசார் தடுப்பார்களா? அல்லது அசம்பாவிதம் நடந்து முடிந்த பின்னர் குற்றவாளிகளை தேடி கண்டுபிடிப்பார்களா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
இந்த கேள்விக்கு பதில் அளித்த தலைமை குற்றவியல் வக்கீல்அசன்முகமது ஜின்னா, " சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் காரில் ஒரு முறை சென்றபோது இதுபோல் சம்பவம் நடந்துள்ளது. அப்போது பாதுகாப்பு போலீசார் படுகாயம் அடைந்தார். நெல்லையில் என்ன நடந்தது? என்பது குறித்து விரிவான அறிக்கையை நாங்கள் தாக்கல் செய்வோம்" என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், "பொதுமக்கள் பார்வை படும் வகையில் நீதிமன்ற வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும். நீதிமன்றம் முன்பு நடந்த இந்த கொலை சம்பவத்தினால், திருநெல்வேலியில் வழக்கறிஞர்கள் அச்சம் அடைந்துள்ளனர். போலீசார் துப்பாக்கி வைத்திருந்தால், கொலையாளிகளின் கால்களில் சுட்டு அவர்களை பிடித்து இருக்கலாம். அல்லது அவர்கள் தப்பி செல்லும் கார் டயரில் சுட்டு, டயரை பஞ்சர் ஆக்கியும் அவர்களை பிடித்து இருக்கலாம். சீருடை அணிந்து பணி செய்யும் போலீசார் சாதாரணமாக இருந்துவிட முடியாது என்று கூறினார்கள்.
தொடர்ந்து இந்த வழக்கை இன்று (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாக கூறிய நீதிபதிகள், அப்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும், நடந்த சம்பவம் குறித்து நெல்லை வக்கீல்களிடம் விசாரித்து, பார் கவுன்சில் வக்கீல் சந்திரசேகர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.