சென்னை: அதானியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவில்லை. ஆனால் அவரது மருமகன் சபரீசன் மற்றும் முதல்வரை சுற்றி இருக்கும் அதிகாரிகள் சந்தித்துள்ளனர். போன வாரம் கூட சந்திப்பு நடந்துள்ளது. இதனை ஸ்டாலின் மறுத்தால் அதற்கான ஆதாரத்தை வெளியிட தயாராக இருக்கிறோம் என்று அண்ணாமலை பரபரப்பாக கூறியுள்ளார்.
பெரும்பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் கவுதம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது நம்நாட்டில் சூரிய ஒளி (சோலார்) மின்சார ஒப்பந்தம் பெற அதானி நிறுவனம் ரூ.2,200 கோடியை பல்வேறு வகைகளில் லஞ்சமாக கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவில் முதலீடுகளை பெற்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 7 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதோடு அதானியிடம் இருந்து பணம் பெற்றவர்களின் பட்டியலில் ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
இது தமிழகத்திலும் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் அதானியை சந்தித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் தான் தமிழக சட்டப்பேரவையில் அதானி விவகாரம் குறித்து நேற்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அமெரிக்காவில் இருக்கும் அதானி வழக்குக்கும் தமிழகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. என்னை அதானி சந்திக்கவில்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இதுதொடர்பாக இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை கூறியதாவது: அதானிக்கு, திமுக அரசு தொடர்ந்து ஒப்பந்தம் கொடுக்கிறது என்பதை நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். அந்த ஒப்பந்தம் அதிமுக ஆட்சியில் தான் கொடுத்தது. நாங்கள் கொடுக்கவில்லை என்று ஒரு அமைச்சர் கூறுகிறார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கமுதி சோலார் பவர் பிளாண்ட் ஒப்பந்தத்தை கொடுத்து உள்ளனர். முதல்வர்
ஸ்டாலின் நேற்று சட்டசபையில் பேசும்போது எதிர்க்கட்சிகள் என் மீது அபாண்ட குற்றச்சாட்டு வைக்கின்றனர். நான் அதானியை சந்திக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
எங்கேயும் கூட பாஜக முதல்வர் ஸ்டாலின், அதானியை சந்தித்ததாக சொல்லவில்லை. அதானியை சந்திப்பது குற்றமும் அல்ல. நீங்கள் அதானிக்கு ஒப்பந்தம் கொடுத்து உள்ளீர்களா? என்பது தான் எங்களின் கேள்வி. இன்று முதல்வருக்கு நாங்கள் ஒரு கேள்வி கேட்கிறோம். நீங்கள் தான் அதானியை சந்திக்கவில்லை என்று சொல்லியுள்ளீர்கள். நாங்கள் உங்களின் மருமகனும், அதானியும் சந்தித்ததாக குற்றச்சாட்டை வைக்கிறோம். உங்கள் சார்பாக உங்களை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான தனி செயலாளர்கள் அதானி சார்ந்தவர்களை சந்தித்துள்ளனர். போனவாரமும் சந்திப்பு நடந்துள்ளது.
உங்களின் மருமகன் சந்திக்கிறார். உங்களை சுற்றி இருக்கும் அதிகாரிகள் சந்திக்கின்றனர். இப்போதும் அதானியை சந்திப்பது தப்பு இல்லை என்பதை நாங்கள் கூறுகிறோம். ஆனால் நீங்கள் சொல்வதற்காக நாங்கள் இதை கூறுகிறோம். உங்களின் மருமகன் சந்திக்கிறது என்பது நீங்கள் சந்தித்தது போல் தான் ஆகும். உங்களின் மருமகன் சந்திக்கவில்லை என்று சட்டசபையில் நீங்கள் நாளை சொல்வீர்களா? சபரீசன், அதானி நிறுவனத்தை சார்ந்த யாரையும் லீலா பேலஸ் ஓட்டலிலோ, அவரது வீட்டிலேயோ, இன்னொரு இடத்திலேயோ சந்திக்கவில்லை என்று சொல்ல முடியுமா? அப்படி சொன்னால் நாங்கள் ஆதாரத்தை தருகிறோம். இதனால் முதல்வர் திசைதிருப்பும் நடவடிக்கையை விட்டுவிட வேண்டும்.
பாஜக, அதானி.. அதானி என்று திமுக எம்பிக்கள் டெல்லியில் கூக்குரல் விடுகிறார்கள். ஆனால் தமிழக பாஜக கட்சி இங்கேயே அதானிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது என்பதைதான் சொல்கிறது. அதனை நல்ல விதத்தில் கொடுத்துள்ளீர்களா? இல்லையா? என்பதை மக்கள் மன்றத்தில் வையுங்கள். அதானியை சந்திக்கவில்லை என்று மடைமாற்றும் முயற்சியை முதல்வர் கைவிட வேண்டும். இது இல்லை என்று சொன்னால் எந்த இடத்தில் எந்த தேதியில் சந்தித்தனர் என்பதை நாங்கள் சொல்கிறோம்'' என்றார்.