நீங்க அதிக வரி போட்டா.. நாங்களும் அதையேதான் செய்வோம்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

post-img
நியூயார்க்: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பலமான வர்த்தக உறவுகள் இருக்கின்றன. இந்நிலையில், இந்தியா தனது பொருட்களுக்கு அதிக வரியை நிர்ணயித்தால், நாங்களும் அதையேதான் செய்வோம் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்வதை உலக நாடுகள் பெரும்பாலும் விரும்புவதில்லை. ஆசியாவை பொறுத்தவரை இந்தியாவும், பாகிஸ்தானும்தான் அமெரிக்காவுடன் கொஞ்சி குலாவி வருகின்றன. மற்றபடி தென்கொரியா, ஜப்பான், தைவான் போன்ற கிழக்கு ஆசிய நாடுகளும், வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளும் சீனாவுடன்தான் வர்த்தகம் செய்து வருகின்றன. இப்படி இருக்கையில் அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தகம் இனி வரும் காலங்களில் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று சொல்லப்படுகிறது. அதாவது, மார்-எ-லாகோ-வில் செய்தியாளர்களிடம் பேசியிருந்த டிரம்ப் இந்தியா தனது பொருட்களுக்கு அதிக வரியை விதித்தால் நாங்களும் அவ்வாறே செய்வோம் என்று கூறியுள்ளார். இன்றைய தேதியில் இந்தியாவும், பிரேசிலும்தான் அமெரிக்காவுக்கு அதிக வரியை விதிப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். டிரம்ப் பேசியது என்ன?: "என்னை பொறுத்தவரை 'பரஸ்பரம்' எனும் வார்த்தை முக்கியமானது. இந்தியாவிலிருந்து இங்கு நிறைய பொருட்கள் வருகின்றன. ஆனால் அவர்கள் 100% வரியை விதித்தால், நாங்களும் அதையேதான் செய்வோம். உங்களுக்கு தெரியும், இந்தியா எங்களுக்கு ஒரு சைக்கிளை ஏற்றுமதி செய்கிறது என்றால், அதேபோல அவர்களுக்கும் நாங்கள் ஒரு சைக்கிளை ஏற்றுமதி செய்கிறோம். அப்படியெனில் வரிவிதிப்பு விகிதமும் ஒன்றாகதானே இருக்க முடியும். இந்தியாவும் பிரேசிலும்: இன்றைய தேதியில் இந்தியாவும், பிரேசிலும்தான் எங்களிடம் அதிக வரியை வசூலிக்கின்றன. பரவாயில்லை இருக்கட்டும்.. ஆனால் நாங்களும் அதேயேதான் பின்பற்ற விரும்புகிறோம். அதனால்தான் நான் பரஸ்பரம் என்கிற வார்த்தையை பயன்படுத்தினேன்" என்று கூறியுள்ளார். டிரம்பின் வர்த்தக செயலாளரான ஹோவர்ட் லுட்னிக்கும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். "நீங்கள் எங்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை வைத்துதான், நீங்கள் எப்படி நடத்தப்படுவீர்கள் என்பது இருக்கும்" என்று கூறியுள்ளார். இந்தியா என்ன ஏற்றுமதி செய்கிறது?: இந்தியாவிலிருந்து பெட்ரோலிய பொருட்கள், நகைகள், ரத்தின கற்கள், மருந்துகள், இயந்திரங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள், ஜவுளி, அரிசி (குறிப்பாக பாஸ்மதி), ஆட்டோமொபைல்கள் மற்றும் வாகன பாகங்கள், தேநீர், காபி மற்றும் மசாலா பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது தவிர அமெரிக்க ஐடி தொழிலில் இந்தியா மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்து வருகிறது. மேலும், அமெரிக்காவில் அதிகமான அளவில் இந்திய மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள்: விமானம் மற்றும் விண்கலம், இயந்திரங்கள் மற்றும் மின் உபகரணங்கள், இரசாயன பொருட்கள், வாகனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு உபகரணங்கள், சோயாபீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இப்படியாக இந்தியாவுக்கும்-அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகம் 150 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.1.24 லட்சம் கோடி) அளவில் இருக்கிறது. தற்போது வரிவிதிப்பு குறித்து அமெரிக்கா பேசியிருப்பது இந்த வர்த்தக உறவை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Related Post