டெல்லி: அதானி விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. ஆனால் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி அதனை விரும்பவில்லை. இதனால் அதானி விவகாரத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியை போல் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியை விட்டு தூரம் சென்றுள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடர் நவம்பர் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி மீண்டும் அதானி விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அதானி மற்றும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை இணைத்து ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
தற்போது அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. நம்நாட்டில் சூரிய ஒளி (சோலார்) மின்சார ஒப்பந்தம் பெற அதானி நிறுவனம் ரூ.2,200 கோடியை பல்வேறு வகைகளில் லஞ்சமாக கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவில் முதலீடுகளை பெற்றதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த விவகாரத்தை மீண்டும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே சபைக்கு வெளியே காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி லோக்சபா, ராஜ்யசபாவில் அதானி விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கி வருகிறது. ஆனால் லோக்சபா, ராஜ்யசபா தலைவர்கள் அனுமதிக்காததால் காங்கிரஸ் கட்சியின் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சபைகள் முடங்கியும் வருகிறது.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ள அதானி விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி விவாதிக்க ‛இந்தியா’ கூட்டணியில் உள்ள சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. இதனை அந்த கட்சி எம்பி வெளிப்படுத்தி உள்ளார். அதாவது லோக்சபாவில், சரத்பவார் கட்சியின் ஷிரூர் தொகுதி எம்பி அமோல் கோல்ஹே நேற்று முன்தினம் எழுந்து பேசினார்.
அப்போது அவர், ‛‛ஒரு தொழிலதிபர் மற்றும் ஒரு அரசியல் தலைவருக்கு இடையேயான உறவில் சிக்கி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் முழக்கங்களுக்கு பதில் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பான விவாதங்கள் தான் சபையில் தேவை. விவசாயிகள், இளைஞர்கள், சாமானிய மக்கள் தொடர்பான பிரச்சனைகளை எழுப்பி அதற்கு தீர்வு காண்பது தான் இங்கு முக்கியம். இதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு செய்ய வேண்டும்’’ என்று கூறினார். அவர் இப்படி சொன்னவுடன் அருகே இருந்த சரத்பவாரின் மகள் சுப்ரியா சூலேவும் அமோல் கோல்ஹே சொல்வது சரிதான் என்பது போல் தலையசைத்தார்.
இதன்மூலம் அதானி விவகாரத்தை கையில் எடுத்து காங்கிரஸ் சபையை முடக்குவததை ‛இந்தியா’ கூட்டணியில் உள்ள சரத்பவாரின் கட்சி விரும்பவில்லை என்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே அதானி விவகாரத்தை பெரிதாக எடுத்து காங்கிரஸ் கட்சி பேசுவதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி அதிருப்தியை வெளிக்காட்டி இருந்தது. அதானி பிரச்சனைகளை விட்டுவிட்டு சம்பலில் நடந்த கலவரம் மற்றும் வங்கதேசம் தொடர்பான பிற முக்கிய பிரச்சனைகளை பற்றி விவாதிக்க வேண்டும் என்று இருகட்சிகளும் தெரிவித்து அதானி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து தூரம் சென்றன.
அந்த வரிசையில் தற்போது ‛இந்தியா’ கூட்டணியில் உள்ள சரத்பவார் கட்சியும் காங்கிரஸை கைகழுவி உள்ளது. இதனால் அதானி விவகாரத்தை தொடர்ந்து பேசி வரும் ராகுல் காந்திக்கு ஆதரவாக ‛இந்தியா’ கூட்டணி கட்சியினர் பேசாமல் போகலாம். இது காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலாக மாறலாம்.