பொங்கல் தொகுப்பில் என்னென்ன பொருட்கள்? எப்போது வழங்கப்படும்? ராதாகிருஷ்ணன் சொன்ன முக்கிய தகவல்

post-img
சென்னை: பொங்கல் பண்டிகையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு எப்போது வழங்கப்படும்? என்னென்ன பொருட்கள் இருக்கும்? என்ற கேள்விகளுக்கு தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடை மூலம் பொங்கல் தொகுப்பு என்பது வழங்கப்படும். கடந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் 1000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது. அந்த வகையில், இந்தாண்டும் அதே பொருள்கள் வழங்கப்படுமா? அல்லது அவற்றில் மாற்றம் இருக்குமா? என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் தான் சென்னை சோழிங்கநல்லூரில் தனியார் நிகழ்ச்சியில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கலந்து கொண்டார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பொங்கல் தொகுப்பு எப்போது வழங்கப்படும்? பொங்கல் தொகுப்பில் கடந்த முறையை விட கூடுதல் பொருட்கள் எதுவும் வழங்கப்படுமா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‛‛முதல்வர் அறிவிக்ககூடிய பொங்கல் தொகுப்பை வரும் வாரத்தில் முதல்வர் அறிவிப்பார். அதற்கு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். கரும்பு கொள்முதல் தொடர்பாக வேளாண் துறையுடன் சேர்ந்து அனைத்து ஏற்பாடும் மேற்கொண்டு வருகிறோம். கூடுதல் பொருட்கள் என்பது கொள்கை ரீதியிலான முடிவு தான். ஏற்கனவே அமைச்சர் கூறியுள்ளார். முதல்வர் அறிவிக்கக்கூடிய அறிவிப்புகளை நாங்கள் முன்கூட்டியே அறிவிக்க கூடாது. முதல்வர் அறிவிப்புக்கு நாம் காத்திருக்க வேண்டும். இப்போது டிசம்பர் 20+ தேதி தான் ஆகிறது. அறிவிப்பு வரும் வாரத்தில் வரும்'' என்றார். இந்தவேளையில் பல ரேஷன் கடைகளில் பச்சரிசி தட்டுப்பாடு உள்ளதே? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு ராதாகிருஷ்ணன், ‛‛அரிசி, பருப்பு எல்லாமே 2, 3 மாதத்திற்கு தேவையான இருப்பு உள்ளது. புழுங்கல் அரிசி உடலுக்கு நல்லது. அதேநேரத்தில் 30 சதவீதம் பச்சரிசி வழங்கப்படுகிறது. பல இடங்களில் புழுங்கல் அரிசி தான் கேட்கிறார்கள்.பச்சரிசி எந்தெந்த இடங்களில் கேட்கிறார்களோ? அதனை பார்த்து பச்சரிசி வழங்க நான் கடமைப்பட்டுள்ளேன். பச்சரியை தட்டுபாடின்றி வழங்க நடவடிக்கை எடுப்போம். பொங்கல் நேரத்தில் பச்சரிசி தேவை அதிகம் உள்ளது'' என்றார். மேலும் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‛‛தமிழகத்தில் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. நான் எப்போதும் கூட்டுறவு மற்றும் உணவு 2 கண்கள் என்று சொல்லுவேன். முதல்வர் சொல்வது போல் உணவை ரேஷன் கடைகள் மூலம் கொடுப்பது மட்டும் நமது பணி அல்ல. அதனை பாதுகாப்பதும் நமது பணி என்ற வகையில் தமிழ்நாடு நகர்ந்து கொண்டு இருக்கிறது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் என்ற மத்திய அரசு திட்டத்தை முழுமையாக செயல்படுத்துகிறோம். அதற்கு மேலாக இன்னொரு 1.14 கோடி பேர் பயன்பெறுகின்றனர். அதற்கு மேலாக 1.04 கோடி பேருக்கு இலவச அரிசி, ஒரு கிலோ பருப்பு, சர்க்கரை எல்லாம் வழங்குகிறோம். அதே போல் பருப்பும் தயார் நிலையில் உள்ளது. உணவு பாதுகாப்பு துறையில் ஸ்பெஷல் பிடிஎஸ் என்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது. தமிழகத்தில் தற்போது 2.25 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளது. 1.54 கோடி புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கண்காணித்து வருகிறோம். தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கடைகள் சரிசெய்யப்பட்டு வருகிறது'' என்றார்.

Related Post