சேலத்தில் ஆற்றில் குதித்த மோகனா.. ஏழு நாட்களுக்கு பின் கரை ஒதுங்கிய உடல்.. என்ன நடந்தது?

post-img

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ராமு என்பவரை மோகனா என்ற பெண் காதல் திருமணம் செய்தார். திருமணம் ஆனது முதலே அடிக்கடி மது அருந்திவிட்டு வருவதை ராமு வழக்கமாக வைத்திருந்தாராம். இதனால் மனைவி பேச மறுத்த நிலையில், திடீரென ஆற்றில் குதித்துள்ளார். இதை கண்டு கர்ப்பிணியான மோகனா ஆற்றில் குதித்தார். சம்பவம் நடந்து ஏழு நாட்களுக்கு பிறகு அவரது உடல் கரை ஒதுங்கியது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பகுதியை சேர்ந்த 27 வயதாகும் ராமு, கொத்தனார் வேலை செய்து வருகிறார். ராமுவுக்கு கடந்த ஓராண்டிற்கு முன்பு வேட்டைக்காரனூர் பகுதியை சேர்ந்த 19 வயதாகும் மோகனா என்பவரை காதலித்து கல்யாணம் செய்துள்ளார்கள். ராமுவுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி ராமு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்படித்தான் கடந்த வாரம் குடிபோதையில் வந்த ராமுவை இப்படியே தினமும் குடித்துக் கொண்டிருந்தால் எனது தாயார் வீட்டிற்கு சென்று விடுவேன் என்று கூறி தைராய்டு நோய்க்கான மாத்திரையை சாப்பிட்டாராம்.

இதையடுத்து அன்று இரவு 11 மணியளவில் மீண்டும் ராமு-மோகனா இருவருக்கும் தொடர்ந்து தகராறு முற்றியதையடுத்து தனது தாயார் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து மோகனா புறப்பட்டு அங்குள்ள வசிஷ்ட நதிக்கரை வழியாக நடந்து போயிருக்கிறார். மோகனா பின்னாலேயே ராமு போனாராம். இந்த சூழலில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக வசிஷ்ட நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அப்போது மனைவியின் பின்னால் சென்ற ராமு, தாயார் வீட்டிற்கு நீ சென்றால் அருகில் உள்ள ஆற்றில் குதித்து விடுவேன் என்று மோகனாவிடம் கூறியிருக்கிறார்.
ஆனால் அதை கண்டுகொள்ளாமல் மோகனா நடந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமு திடீரென வசிஷ்ட நதியில் குதித்துள்ளார். கணவன் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதை கண்ட காதல் மனைவி மோகனா தானும் ஆற்றில் குதித்திருக்கிறார். கரைபுரண்டு ஓடிய ஆற்றுநீரில் இருவரும் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
ராமு தண்ணீரில் அடித்து சென்ற போது அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பத்தை பிடித்து கொண்டு தன்னை காப்பாற்றுங்கள் என கத்தியிருக்கிறார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக சுதாரித்து கயிறு கட்டி ஆற்றுக்குள் மின் கம்பத்தில் போராடிக்கொண்டு இருந்த ராமுவை மீட்டனர். ஆனால் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மோகனாவை அவர்களால் மீட்க முடியவில்லை. அதன்பிறகு வாழப்பாடி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மோகனாவை தொடர்ந்து தேடினர். அவரை கண்டுபிடிக்கவில்லை. அவருடைய கதி என்ன? என்று தெரியாமல் இருந்து வந்தது. 7 நாட்களுக்கு பிறகு மோகனா உடல் கரை ஒதுங்கியது. அவரது உடலை வாழப்பாடி போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

Related Post