சென்னை: தாடி வைத்திருந்த விவகாரத்தில் முஸ்லிம் காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சமூகநீதி திராவிட மாடல் ஆட்சியில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்? என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மதுரையை சேர்ந்த அப்துல் காதர் இப்ராஹிம் என்ற முதல்நிலை காவலர், பணியின் போது தாடி வைத்திருந்ததாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டும் செல்லும் விதமாக, வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியானாது. இதனை ஒருகுற்றமாக கருதி முதல்நிலை காவலர் அப்துல் காதர் இப்ராஹிம் காவல் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
தாடி வைத்த காவலர்:
தாடி வைத்ததற்காகவும், அதனை முறையிட்டதற்காகவும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியான உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நாட்டின் பன்முகத் தன்மையை சுட்டிக்காடி, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போலீஸ் பணியில் இருக்கும் போதும், நேர்த்தியான தாடியை வைத்துக்கொள்ள அனுமதி வழங்குவதை சுட்டிக் காட்டினார். இதற்கு காவல்துறை சட்ட விதிகளில் அனுமதியும் உண்டு.
காவலர் பணிநீக்கம்:
அவ்வாறு இருக்கும் போது தாடி வைப்பதை தடை விதிக்க முடியாது எனக்கூறி அவரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்தும், அவருக்கு நிறுத்திவைக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, தமிழக உள்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முதல்நிலை காவலர் அப்துல் காதர் இப்ராஹிம், தனக்கு காவல் ஆய்வாளர் ஈடுகட்டு விடுப்பு அளிக்காதது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதற்காக, அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் அதிரடி:
மனுதாரரை விட உயர்ந்த பதவியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் பலர் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர். அவை தொடர்பாக ஊடகங்களில் செய்தியும் வெளியாகி உள்ளது. முதல்நிலை காவலர் அப்துல் காதர் இப்ராஹிம் போன்று, சமூக வலைதளங்களில் விடுப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட பல காவலர்களை டிஜிபி நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்த செய்திகளும் பல்வேறு ஊடகங்களில் வெளியாயின. ஆனால், காவலர் அப்துல் காதர் இப்ராஹிம் மீதான விவகாரத்தில் மட்டும், பாரபட்சமாக உட்சபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி, அந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது.
தாடி வைக்க அனுமதி:
காவல்துறையில் நேர்த்தியான முறையில் தாடி வைக்க போலீஸ் சட்டம் அனுமதிக்கும் போது, இஸ்லாமிய காவலருக்கு மட்டும் அதனை மறுப்பது கண்டிக்கத்தக்கது. அதோடு, உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது போல பல காவலதிகாரிகள் சமூக வலைதளங்களில் நீதிகோரி வீடியோக்களை வெளியிடும்போது, சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு அவரை பணிநீக்கம் செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
திராவிட மாடல் அரசு:
சமூகநீதி திராவிட மாடல் அரசு என பெருமை பேசும் முதல்வர் அவர்கள் இந்த பாரபட்சமான நடவடிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கில் ஏற்கனவே நீதிமன்றம் குட்டுவைத்தும், மீண்டும் மீண்டும் மேல்முறையீடுக்கு செல்வது ஏன்? காவல்துறைக்கு தலைமை வகிக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு தானே இதுபோன்ற மேல்முறையீடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும். அல்லது அவரின் கவனத்துக்கு கொண்டுவரப்படாமல் தெரியாமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றால், காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளதா? என்கிற கேள்வி எழுகிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் தெளிவுப்படுத்த வேண்டும்.
முஸ்லிம் இளைஞர்கள்:
இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர், இதுபோன்ற விவகாரத்தில் பல முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் அரசு வேலையை இழந்துள்ளனர். காவலர் அப்துல் காதர் இப்ராஹிம் நீதிமன்றத்தை நாடியதால் அந்த விவகாரம் வெளியில் வந்துள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற வகையில், அப்துல் காதர் போன்று இன்னும் பல இளைஞர்கள் பாரபட்ச நடவடிக்கையால் தங்களது வேலைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மை மக்களுக்கு உண்மையான பாதுகாவலர்கள் தாங்கள் தான் என மார்தட்டும் திமுக அரசு, மறுபுறம் அதற்கு நேர் எதிரான பாரபட்ச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
நடவடிக்கை தேவை:
ஆகவே, சமூகநீதி பேசும் திராவிட மாடல் அரசு, சமூக நீதியை பேசுவதோடு மட்டுமல்லாமல் செயல்பாட்டிலும் அதனை காட்ட வேண்டும். காவலர் அப்துல் காதர் இப்ராஹிம் வழக்கில் அடுத்தடுத்து மேல்முறையீடு செய்யாமல், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த முன்வர வேண்டும். மட்டுமின்றி, இதுபோன்று பாதிக்கப்பட்ட இளைஞர்களை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்டோன் சுவாமி:
அதேபோல் சமீபத்தில், சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், தனக்கு சொந்தமான தோட்டத்தில் மறைந்த பழங்குடியின மக்களின் போராளியான ஸ்டேன் சுவாமி அவர்களின் சிலையை வைத்து நினைவிடம் அமைக்க முயன்றதை தடுத்து நிறுத்தியது காவல்துறை. இதற்கெதிராக உயர்நீதிமன்றத்தை நாடியபோது, ஸ்டேன் சுவாமி அவர்கள் ஒரு நக்சல்பாரி என அரசு விளக்கம் தெரிவித்தது. ஆனால், நீதிமன்றமோ குற்றம் நிரூபிக்கப்படாத ஒரு குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு, தனியார் இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க மறுக்கக் கூடாது என குட்டுவைத்து, சிலை வைப்பதற்கான அனுமதியைக் கொடுத்தது. ஸ்டேன் சுவாமியை பயங்கரவாதி என்று முத்திரை குத்தி பிணை கொடுக்க மறுத்து, அவரை மரணப்படுக்கைக்கு கொண்டுசென்ற பாசிச பிஜேபியின் அரசுக்கும், ஸ்டேன் சாமியை பயங்கரவாதி என்று நீதிமன்றத்தில் உரைத்த திமுக அரசுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?
சமூக நீதி:
ஆகவே, சமூகநீதி திராவிட மாடல் ஆட்சி என்பதால் அமைதியாக இருக்காமல், அனைத்து ஜனநாயக சக்திகளும் இதுபோன்ற பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு எதிராக குரலெழுப்ப முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். ” என கூறியுள்ளார்.