நாமக்கல் அனுப்பிய "பார்சல்".. சந்திரயான் 3க்கு உயிர் நாடியான 2 தமிழக கிராமங்கள்..

post-img

சந்திரயான் 3 திட்டத்தின் ரோவர் மற்றும் லேண்டரை நிலவின் தரையில் தரையிறக்குவதற்காக நாமக்கல்லில் இருந்து மண் எடுத்து வந்துள்ளனர். எதற்கு இவர்கள் மண் எடுத்தனர், பின்னணியில் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஜூலை 22, 2019ம் ஆண்டு நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திராயன் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் அதே வருடம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் லேண்டர் விக்ரம் தரையில் இறங்கும் முன் 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது.

அதன்பின்னர்தான் நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. 3 மாதமாக இஸ்ரோ தீவிரமாக தேடியது. அதன்பின் இதை நாசா கண்டுபிடித்தது. நாசாவின் LROC (Lunar Reconnaissance Orbiter) விண்கல ஆய்வு கருவி மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது. லேண்டர் இறங்காத காரணத்தால் உள்ளே இருக்கும் ரோவரும் வெடித்து சிதறியது. ஆனாலும் இந்த திட்டம் முழு தோல்வி கிடையாது. காரணம் ஆர்பிட்டர் வெற்றிகரமாக அடுத்த ஒன்றரை வருடம் நிலவை சுற்றியது.

சந்திரயான் 3: இதையடுத்து தற்போது சந்திரயான் 3 திட்டம் செய்யப்பட்டு உள்ளது உள்ளது. விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டையும் மீண்டும் நிலவில் வெற்றிகரமாக களமிறக்கும் திட்டத்தில் இஸ்ரோ களமிறங்கி உள்ளது. தற்போது சந்திரயான் 3 திட்டத்தில் சந்திரயான் 2ல் இருந்தது போல ஆர்பிட்டர் இருக்காது. மாறாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டு மட்டுமே உள்ளது. இதில் ப்ரோபல்ஷன் மாடல் என்ற ஒரு உந்த கூடிய ப்ரோபல்ஷன் என்ற பகுதியும் உள்ளது. இதுதான் இந்த லேண்டர், ரோவரை நிலவிற்கு கொண்டு செல்லும்.

நாமக்கல் கிராமங்கள்: இந்த சந்திரயான் 3 திட்டத்தின் ரோவர் மற்றும் லேண்டர் நிலவின் தரையில் தரையிறங்குவதற்காக இங்கேயே இஸ்ரோ ஆய்வு மையங்களில் பயிற்சிகள் செய்யப்பட்டன. இந்த இரண்டும் நிலவில் இறங்குவதற்காக பூமியில் வைத்து சோதனைகள் செய்யப்பட்டது. இதனால் இஸ்ரோ பூமியிலேயே நிலவு போன்ற சுற்றுசூழலை ஏற்படுத்தி ஆராய்ச்சி கூடத்தில் வைத்து ஆராய்ச்சியை செய்தது.

அதாவது ஆராய்ச்சி கூடத்தில் நிலவில் இருப்பது போலவே ஈர்ப்பு விசை வைத்து, அங்கு இருக்கும் வாயுக்களை மட்டும் பயன்படுத்தி,மிக மிக குளிரான வானிலையில், விக்ரம் லேண்டர் சரியாக இறங்குகிறதா என்று சோதனை செய்தது. இதற்காக நிலவில் இருப்பது போல தரையும், மண்ணும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிலவில் ஆராய்ச்சி செய்ய சந்திரயான் 1ஐ அனுப்பிய போது இஸ்ரோ நாசாவிடம் இருந்து மண் வாங்கியது. இது நிலவில் இருப்பதை போலவே இருக்கும் மண் ஆகும். மொத்தம் 10 கிலோ மண்ணை இஸ்ரோ வாங்கியது. இதன் ஒரு கிலோ 150 டாலருக்கு வாங்கப்பட்டது.

ஆனால் சந்திரயான் 2விற்கு 60 கிலோ வரை இந்த மணல் தேவைப்பட்டது. அதனால் அப்போது இஸ்ரோ நாசாவை நம்பவில்லை. பட்ஜெட் காரணங்களால் இந்தியா நாசாவிடம் இருந்து மணல் வாங்கவில்லை. அதற்கு பதிலாக நாமக்கல் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களில் இருந்து இஸ்ரோ மண் வாங்கி உள்ளது. அதே மண்ணைதான் இப்போது சந்திரயான் 3 திட்டத்திற்கும் இஸ்ரோ பயன்படுத்தி உள்ளது.

நாமக்கல் கிராமம்: ஆம் நாமக்கல்லில் உள்ள சிட்டாம்பூண்டி, குன்னமலை ஆகிய கிராமங்களில் இருந்து மண் வாங்கி உள்ளது. இங்கு இருக்கும் பாறைகளை வாங்கி, அதை சேலத்தில் உள்ள தொழிற்சாலையில் தூளாக நொறுக்கி உள்ளனர். அதன் மூலம் கிடைத்த மண் நிலவில் இருக்கும் மணலை போலவே இருந்துள்ளது. பின் அதை வைத்து வைத்து ஆராய்ச்சியை, சோதனையை செய்து பார்த்து இருக்கிறார்கள்.

நிலவின் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த மணலை எடுத்து உள்ளனர். இதில் செய்யப்பட சோதனையின் அடிப்படையில்தான் தற்போது சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டு, நிலவில் இறங்க உள்ளது. இதற்காக அந்த இரண்டு கிராம மக்கள் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. சந்திரயான் 3விற்கு உதவி செய்வதே பெரிய மகிழ்ச்சி என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Related Post