கோயில் உண்டியலில் ஐபோன்.. நானாக இருந்தால் வித்தியாசமாக கையாண்டு இருப்பேன்! - கார்த்தி சிதம்பரம்

post-img
சிவகங்கை: கோயில் உண்டியலில் பக்தர் தனது ஐபோனை தவறவிட்டது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. இது குறித்து பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், முடிவெடுக்க வேண்டிய இடத்தில் நான் இருந்தால், இந்த விவகாரத்தை வித்தியாசமாக கையாண்டு இருப்பேன் என்று கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் கந்தசுவாமி திருக்கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலில் தரிசனத்திற்கு என நாள்தோறும் குறிப்பிட்ட அளவில் பக்தர்கள் வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் இக்கோயிலுக்கு சென்றிருந்த சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் சாமி கும்பிட்டுவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தியிருக்கிறார். அப்போது தவறுதலாக மேல் பாக்கெட்டில் வைத்திருந்த ஐபோன் நழுவி உண்டியலில் விழுந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கோயில் நிர்வாகத்திடம் போன் குறித்து கேட்டிருக்கிறார். ஆனால் கோயில் நிர்வாகம் போனை வழங்க மறுத்துவிட்டது. மட்டுமல்லாது, உண்டியலில் விழுந்தது அனைத்தும் சுவாமிக்கே சொந்தம் என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து தினேஷ் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை அணுகி, நடந்த சம்பவத்தை விரிவாக விளக்கி, செல்போனை கேட்டு கடிதம் ஒன்றையும் கொடுத்திருக்கிறார். கடிதத்தை பெற்றுக்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. அமைச்சர் சேகர்பாபுவும் இதே கருத்தை செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ள கார்த்தி சிதம்பரம், "இந்த விவகாரத்தை நானாக இருந்தால் வித்தியாசமாக கையாண்டு இருப்பேன்" என்று கூறியுள்ளார். அதாவது, "உண்டியலில் ஐபோன் விழுந்த செய்தியை நான் முழுமையாக படித்திருந்தேன். இந்த விவகாரத்தில் உண்டியலில் விழுந்தது அனைத்தும் கோயிலுக்கு சொந்தம் என்று அறநிலையத்துறை கூறுகிறது. இதுவும் சரிதான். இன்று செல்போன் விழுந்துவிட்டது என்று கூறுபவர்கள், நாளை கை தவறி மோதிரம் விழுந்துவிட்டது, தங்க காசு விழுந்துவிட்டது என்று கூறுவார்கள். மொபைல் ஃபோன் என்றால் யாருடையது என கண்டுபிடித்து விடலாம். ஆனால் மோதிரம், செயின் போன்றவை விழுந்து விட்டால் யாருடையது என்பதை கண்டுபிடிப்பது கடினமானது. இந்த முறை செல்போனுக்கு விதிவிலக்கு கொடுத்தால் அடுத்த முறை மோதிரம் செய்து இருக்கும் விதிவிலக்கு கேட்பார்கள். செல்போன் விழுந்த விஷயத்தில் செல்போனுக்கு உண்டான தொகையை கொடுத்துவிட்டு அதனை திரும்ப கொடுத்து இருக்கலாம். இப்படி விதிவிலக்கு செய்திருக்கலாம். மொபைல் போன் என்பது வெறும் பொருள் மட்டுமல்ல அதில் பல தரவுகள் இருக்கிறது. நானாக இருந்தால் இந்த விஷயத்தை சற்று வித்தியாசமாக கையாண்டு இருப்பேன்" என்று கூறியுள்ளார்.

Related Post