காரில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென நெஞ்சு வலிப்பது போல் இருப்பதாக கூறியதையடுத்து உடனடியாக அப்பகுதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சற்று முன்னதாக சேலத்தை கடந்து தருமபுரி மாவட்டம் வழியாக காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை நெருங்கிய போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலிப்பது போல இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறவே, உடனடியாக காரை நிறுத்தி, காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தினர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் அஜீரணக் கோளாறால் உடல் நல பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்காக அவருக்கு அங்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சை முடித்த பின்னர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி பெங்களூருக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பெங்களூரில் உள்ள நாராயாணா ஹிருதாலயா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு பரிசோதனைக்குப் பிறகு அவர் மீண்டும் கிருஷ்ணகிரிக்குச் செல்லக்கூடும் எனத் தெரிகிறது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து, அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் உள்ளிட்ட ஏராளமானோர் காரிமங்கலம் தனியார் மருத்துவமனை முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.