திண்டுக்கல்: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் நத்தம் சென்ற நிலையில், சினிமாவை மிஞ்சிய சேசிங் மூலம் போலீசார் விரட்டினர். இடையில் பேரிகார்டுகள், காவலர், ஆட்டோக்கள் உள்ளிட்டவற்றை இடித்து விட்டு போக்கு காட்டி ஊருக்குள் சிக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காட்டில் ஓடி மறைந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கார்த்திகேயன் என்ற நபரை கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக மர்ம நபர்கள் நேற்று காரில் கடத்தி சென்று சிறிது தூரத்தில் கார்த்திகேயனை பாதி வழியிலேயே இறக்கி விட்டுச் சென்று உள்ளனர்.
கடத்தி வந்து பாதியில் இறக்கி விடப்பட்ட கார்த்திகேயன் உடனே திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து உள்ளார். தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து திண்டுக்கல் -நத்தம் சாலையில் செல்லும் ஒரு பச்சை நிற குவாலீஸ் காரை மறித்து பிடிக்க சொல்லி சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து அந்த காரை சாணார்பட்டி காவல் நிலைய முன்பாக பேரிக்கார்டுகள் அமைத்து தடுக்க முயன்ற போது சசி என்ற காவலர் மீது மீது மோதிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. உடனடியாக கோபால்பட்டியில் இரவு பணியில் இருந்த போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கே அந்த காரை மறித்து நிறுத்த கோபால்பட்டில் பஸ் ஸ்டாப்பில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் உதவியுடன் போலீசார் ஆட்டோக்களை சாலையின் குறுக்கே நிறுத்தி சம்பந்தப்பட்ட காரை நிறுத்த முயற்சித்துள்ளனர்.
ஆனால் அந்த காரை ஓட்டி வந்த மர்ம நபர் காரை நிறுத்தாமல் குறுக்கே இருந்த இடைவெளி லாவகமாக புகுந்து வேகமாக செல்ல முயற்சித்துள்ளார். அப்போது அவ்வழியே சாலையை கடக்க முயன்ற வேம்பார்பட்டியைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி சங்கிலிமணி (வயது 25) என்பவர் மீது கார் பயங்கரமாக மோதி அவரை 50 மீட்டர் சாலையிலேயே இழுத்துச் சென்று தூக்கி வீசியது.
பின்னர் அங்கிருந்தும் நிற்காமல் வேகமாக சென்ற கார் கோபால்பட்டியை அடுத்த வடுகபட்டி பிரிவு என்ற இடத்தில் போலீசார் வரிசையாக சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்த பேரிக்கார்டுகள் மீது மோதியும் எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி தப்பியது. இது குறித்து நத்தம் மற்றும் நத்தம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டு வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த கார் மீண்டும் நத்தம் நோக்கி வேகமாக சென்ற போது எரமநாயக்கன்பட்டி பிரிவுவில் மூன்றுக்கும் மேற்பட்ட லாரிகளை சாலை குறுக்கே நிறுத்தி மர்ம நபர்கள் ஓட்டி வந்த காரை தடுக்க முயன்றுள்ளனர்.
இதைப் பார்த்த மர்ம நபர்கள் காரை யுடர்ன் எடுத்து காரை வேகமாக திருப்பிக் கொண்டு சக்கிலியன் கொடை ஊர்வழியாக தப்பிச் செல்லும்போது காரில் இருந்த 5 பேரில் ஒரு இளைஞர் பசுபதி மட்டும் ஊருக்குள் இறங்கி தப்ப முயற்சித்து ஊருக்குள் இறங்கி ஓடி உள்ளார். இதை பார்த்த அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காரில் வந்த மற்ற 4 பேரும் காரை அதிவேகமாக இயக்கி தப்ப முயன்று கரந்தமலை பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் ஒத்தையடி பாதையில் காரை இயக்கியுள்ளனர்.
அப்பொழுது சக்கிலியன் கொடை பகுதி வழியாக கரந்தமலை வனப்பகுதிக்குள் தண்ணிகொடை பகுதிக்கு காரை அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளனர். அதற்கு மேல் வழி இல்லாததால் கார் புதருக்குள் மாட்டிக் கொண்டதால் காரில் இருந்த 4 மர்ம நபர்கள் காட்டுக்குள் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் காரை சுற்றி வளைத்தனர். காருக்குள்ளிருந்து பட்டாகத்திகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தப்ப முயன்று பொதுமக்களிடம் சிக்கிய இளைஞர் ஒருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தப்பி ஓடியவர்கள் குறித்தும் எதற்காக ஆயுதங்கள் வைத்திருந்தனர் என்றும் சாணார்பட்டி காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நள்ளிரவில் சினிமா பட பாணியில் நடைபெற்ற சேசிங் பொதுமக்களின் துக்கத்தை கலைத்த அதிபயங்கர காரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும் கைது செய்த பசுபதி மற்றும் மூன்று குற்றவாளிகளை திண்டுக்கல் நத்தம் காவல்துறையினர் பிடித்து வாடிப்பட்டி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் .
வாடிப்பட்டி காவல்துறையினர் கடத்தல் சம்பவம் உண்மையா? கார்த்திகேயனை எதற்காக கடத்தினார்கள்? ஏன் பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்டார் ? கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா என்ற பல கோணங்களில் வாடிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.