இலவச வீட்டு மனை.. ஆன்லைன் பட்டா வாங்கியும் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை.. வித்தியாசமான சிக்கல்

post-img
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட முழுவதும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை மூலமும், தாசில்தார் மூலமாகவும் ஆயிரக்கணக்கானோருக்கு இலவச வீட்டுமனை அரசால் வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட இணைய வழி பட்டாவை பயன்படுத்த முடியவில்லை என்றும் அந்த பட்டாக்களை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசு சார்பில் அரசு புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்கப்படுவது வழக்கம். அப்படி இலவசமாக வழங்கப்படும் பட்டாக்களை மக்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு தங்களது தேவைகளுக்காக விற்க முடியும். பிறருக்கு பத்திரப்பதிவு செய்ய முடியும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட முழுவதும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை மூலமும், தாசில்தார் மூலமாகவும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சுமார் 7 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அப்போது பட்டாவை இணையவழி பட்டாவாக மாற்ற அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு தமிழக அரசால் இணையவழி பட்டா அனைவருக்கும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் அரசால் வழங்கப்பட்ட இணைய வழிப்பட்ட மூலம் பத்திரப்பதிவு செய்யவோ, ரசீது போடவோ முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி பொதுமக்கள் விசாரித்த போது, அரசு இதுவரை இணையவழி பட்டாவை இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை என்று தகவல் வெளியானது. இதனால் பட்டா கையில் கிடைத்தும் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து மக்கள் பயன்பெறும் விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. உதாரணமாக செண்பகராமன்புதூர் ஊராட்சி பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 500 குடும்பங்களுக்கு இலவச காலனி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு தரிசு இடமும் வழங்கி அரசு மூலமாக இலவசமாக பட்டாவும் வழங்கப்பட்டது. இந்த பட்டாவை மாற்றி ஒரு ஆண்டுகளுக்கு முன்பு அனைவருக்கும் இணைய வழி பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த இணைய வழி பட்டா மூலம் பத்திரப்பதிவு செய்யவோ, கிராம நிர்வாக அலுவலகத்தில் ரசீது போடவோ முடியவில்லை. இந்த பட்டாவின் நம்பரை செலுத்தினால் பட்டா வரவில்லை. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Post