சென்னை: பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பதே தமிழகத்தில் கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது.. அந்தவகையில், இந்த வருடமும் சில ஜீரணிக்க முடியாத பலாத்கார சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. இதில் ஒட்டுமொத்த பெற்றோர்களையும் நிலைகுலைய வைத்த 3 சம்பவங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில், 9 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை, அரசியல் கட்சிகளிலும் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணியிருந்தது.. அந்த சிறுமியின் கை, கால்களைக் கட்டி, 2 கொடூரரர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்தனர்.. இவர்கள் இருவருமே அதே பகுதியைச் சேர்ந்த கஞ்சா ஆசாமிகளான விவேகானந்தன் (57) மற்றும் கருணாஸ் (19) ஆகியோர் ஆவர்.
புதுச்சேரி: பலாத்காரத்தின்போது, சிறுமியின் வாயை பொத்தியதால், மூச்சுத்திணறி சிறுமி பலியாகிவிட்டார்.. கடைசியில் சிறுமியின் வீட்டருக்கே 100 மீட்டர் தொலைவில் உள்ள வாய்க்காலில், சாக்கு மூட்டையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது... புதுச்சேரி மக்கள் ஒன்றுதிரண்டு வீதிகளில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். சிறுமியை கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் என்று ஆவேசமாக கொந்தளித்தனர்.
"கை, கால்களை கட்டிப்போட்டு செஞ்சிருக்காங்கப்பா... பால் பல்லுகூட விழல.. கை புள்ளப்பா அது" என்றெல்லாம் பெண்கள் கண்ணீருடன் கதறினார்கள்.
குற்றப்பத்திரிகை: விவேகானந்தன், கருணாஸ் இருவருமே கைதானார்கள்.. 500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்தது.. இதில், விவேகானந்தன் சிறையில் உள்ள கழிவறையில், லுங்கியிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால், சிறுமியின் கொலைக்கு போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து இருப்பதே முக்கிய காரணம், போதையை ஒழியுங்கள் என்று கூறி, கடலில் இறங்கி போராட்டமும் செய்தனர்.. சாலைமறியல், சட்டசபை முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை என பலவகையான போராட்டங்களில் புதுச்சேரி சிக்குண்டதை மறக்க முடியாது.
கிருஷ்ணகிரி: அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் உள்ள பள்ளி ஒன்றில் போலி என்.சி.சி. முகாம் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடந்தது. அந்த முகாமில் 8-ம் வகுப்பு மாணவி போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்த பள்ளி தாளாளர், முதல்வர் உள்பட 11 பேர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதில், கைதுக்கு முன்னதாகவே குற்ற' உணர்ச்சிக்காரணமாக எலி மருந்து சாப்பிட்டிருந்த சிவராமன் கடந்த மாதம் 23-ம் தேதி விடியற்காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
சிவராமன்: ஆனால், அதற்கு முன்தினம் 22-ம் தேதி, சிவராமனின் தந்தை அசோக்குமாரும் விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவிலும் பதிவாகியிருந்தன.
இந்த வழக்கில், கந்திகுப்பத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியின் தாளாளர் சாம்சன் வெஸ்லி, பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், ஆசிரியைகள் கோமதி, ஜெனிஃபர், பயிற்சியாளர்கள் சத்யா, சிந்து, சுப்பிரமணியம், சக்திவேல் உள்ளிட்ட 11 பேர் உடந்தையாக இருந்த குற்றத்துக்காக போக்சோவில் கைதானார்கள். சிவராமனின் நண்பரும், நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகியுமான கருணாகரன் கைதானார். இப்படி இந்த வழக்கில், 15 க்கும் மேற்பட்டோர் கைதானதும், அதையொட்டி நடந்த அடுத்தடுத்த மரணங்களும், தமிழ்நாட்டையே உலுக்கியெடுத்துவிட்டன.
அண்ணாநகர்: அதேபோல, சென்னை அண்ணாநகர் சிறுமிக்கு நேர்ந்த கதியையும் யாராலும் எளிதில் மறக்க முடியாது.. அண்ணாநகரில் உள்ள அரசு பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமிக்கு, கடந்த ஆகஸ்ட் 29ல் வயிற்று வலி ஏற்படவும், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்... இதையடுத்து, பக்கத்து வீட்டு 14 வயது சிறுவன் மீது அண்ணாநகர் மகளிர் போலீசில் புகார் தரப்பட்டது. சிறுவனை போலீசார் கைது செய்ததுடன், சிறுமியின் வீட்டருகே வசிக்கும் சதீஷ், 31, என்ற இளைஞரையும் கடந்த செப்டம்பர் 12ல் கைது செய்தனர்.
இந்த வழக்கை சென்னை ஹைகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. பிறகு சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு, அதற்கு இடைக்கால தடையும் பிறப்பிக்கப்பட்டு, இப்படி நீதிமன்ற நகர்வுகள் ஒவ்வொரு பாலியல் வழக்குகளிலும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், காமுகர்களால் பாதிக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகளுக்கு, எதுமாதிரியான நீதி கிடைக்க போகிறது என்று தெரியவில்லை.
தண்டனைகள்: தெலுங்கானாவில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பெண் மருத்துவரை பலாத்காரம் செய்த குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை, நாட்டு மக்கள் வரவேற்றிருந்தனர்.. ஆனால், எவ்வளவுதான்கொடூர தண்டனைகள் தந்தாலும் இதுபோன்ற காமுகர்கள் திருந்த வாய்ப்புகளே இருப்பதில்லை.. போக்சோ சட்டம் இந்த நாட்டில் இருந்தும்கூட, இவ்வளவு தவறுகள் நடக்கிறதென்றால், பெண் குழந்தைகள் மீது "கை" வைக்கவே நடுங்கும் அளவுக்கு, போக்சோவைவிட இன்னும் தீவிரமான சட்டங்களும், கடுமையான தண்டனைகளும் இங்கு உடனடி தேவையாக நம்மிடம் இருக்கிறது...!!