டெல்லி: மாணவர்களின் அரசு தேர்வு விண்ணப்பங்களுக்கும் கூட 18% ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது காயங்களில் உப்பைத் தேய்ப்பதாகும் என காங்கிரஸ் பொதுச்செயலாளரும் வயநாடு லோக்சபா எம்பியுமான பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார். மேலும் ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கனவுகளையே தம்முடைய வருவாய்க்கான ஆதாரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு என்றும் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக பிரியங்கா காந்தி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பாஜகவால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியவில்லை. ஆனால் தேர்வு விண்ணப்ப படிவங்களுக்கு 18% ஜிஎஸ்டி வசூலித்து இளைஞர்களின் காயங்களில் உப்பைத் தேய்த்துவிடுகிறது பாஜக. அக்ன்வீர் திட்டம் உட்பட ஒவ்வொரு அரசு பணிக்கும் ஜிஎஸ்டி வரி வசூல் வசூலிக்கப்படுகிறது. இப்படி தேர்வு விண்ணப்பங்களை பூர்த்தி செய்த பின்னர், அரசாங்கத்தின் ஊழல்களால் வினாத்தாள் கசிந்துவிட்டால் இளைஞர்கள் செலவு செய்த பணம் மொத்தமும் வீணாகிவிடுகிறது. பெற்றோர்கள் தங்களது வாழ்க்கையை தியாகம் செய்து ஒவ்வொரு காசாக சேர்த்து குழந்தைகளின் கல்விக்கு செலவிடுகின்றனர். ஆனால் பாஜக அரசோ, பெற்றோர்களின் கனவையே தமது வருவாய்க்கான ஆதாரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு பிரியங்கா காந்தி சாடியுள்ளார். மேலும் உத்தரப்பிரதேச மாநில கான்பூர் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையின் தேர்வு விண்ணப்பத்தாளையும் ஆதாரமாக தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா காந்தி.