சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு பிறகு முதன்முதலாக பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் விஜய். 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்ட நிலையில் அம்பேத்கர் சிலையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று நடைபெற்று வரும் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய்யும் திருமாவளவனும் பங்கேற்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக தகவல் வெளியானது.
திருமாவளவன் புத்தகத்தை வெளியிட விஜய் அதனை பெற்றுக்கொள்வார் என்று சொல்லப்பட்டது. திமுகவை தனது அரசியல் எதிரியாக பிரகடனப்படுத்தியிருக்கும் விஜய்யுடன் ஒரே மேடையில் திருமாவும் பகிர்ந்து கொள்ளவிருப்பதை திமுக தலைமை அவ்வளவாக ரசிக்கவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில்தான், நடிகர் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தன்னால் பங்கேற்க முடியாது என்று திருமாவளவன் கூறினார். தற்போதைய அரசியல் சூழலில், விஜய்யுடன் ஒரே மேடையை பகிர்ந்தால் அது தேவையில்லாத அரசியல் யூகங்களுக்கும் விவாதங்களுக்கும் வித்திடும் எனக் கருதிய திருமாவளவன் இந்த முடிவை எடுத்து இருப்பதாக சொல்லப்பட்டது. தனது முடிவை நிகழ்ச்சியை நடத்தும் தனது கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனத்திடமும் திருமாவளவன் தெரிவித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்றார். புத்தகத்தை விஜய் வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொள்கிறார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்குப் பிறகு விஜய் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பல நிகழ்ச்சிகளில் விஜய் பங்கேற்றது போலவே தற்போதும் கேஷுவலான உடையிலேயே கலந்து கொண்டுள்ளார். அதே வெள்ளை சட்டை சந்தன கலர் பேண்ட் அணிந்தவாறே விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். விழா அரங்குக்கு விஜய் வந்தபோது அவரது ரசிகர்களும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்களும் உற்சாக ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர். இந்த உடையே விஜயின் அரசியல் அடையாளமாகவே இருக்கும் என்கின்றனர் .
தொடர்ந்து விழா அரங்குக்கு வந்த விஜய் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கிருந்த அம்பேத்கர் சிலையுடன் விஜய் செல்பி எடுத்துக் கொண்டார். தற்போது இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
Weather Data Source: Wettervorhersage 21 tage