சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் கடந்த சில நாட்களாகவே பேசுபொருளாகியிருக்கிறது. இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, எல்லாம் சரியாக நடந்ததல் அரசு எதிலும் தலையிடாது என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு மட்டுமல்லாது தென் இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாக சிதம்பரம் நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இக்கோயில் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கனசபை பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. கனசபையில் பக்தர்கள் அத்துமீறுகிறார்கள் என்று தீட்சதர்கள் தரப்பிலும், தங்களின் வழிப்பாட்டு உரிமை பறிக்கப்படுகிறது என பக்தர்கள் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
தமிழக அரசு கனசபை மீது ஏறி நின்று தரிசனம் செய்யலாம் என்று உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் குறிப்பிட்ட சில நாட்களில் பக்தர்கள் இங்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. இது குறித்து பிபிசி தமிழ் செய்தி ஊடகத்திற்கு தீட்சதர்கள் அளித்த பேட்டியில், "ஆகம விதிப்படி கனசபை மீது நின்று பக்தர்கள் வழிப்பாடு செய்ய எந்த கோயிலிலும் அனுமதி கிடையாது. ஆனால் சிதம்பரம் நடராஜர் கோயில் அனுமதி இருக்கிறது. இப்படி இருக்கையில் சில நேரம் பூஜை உள்ளிட்ட விஷயங்களுக்காக கனசபை மீது அனுமதி மறுப்பது இயல்பானதுதான்" என்று கூறியிருந்தார்.
இப்படியாக பஞ்சாயத்துகள் வெடித்து கிளம்ப, கோயிலின் கணக்கு வழக்குகள் மற்றும் ஆபரண இருப்பு குறித்து தணிக்கை ஆய்வு நடத்த இந்து சமய அறநிலையத்துறை முயன்றது. ஆனால் தீட்சதர்கள் தரப்பில் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில் குழந்தை திருமணம் பிரச்சனை வேறு வெடித்தது. இப்படி இருக்கையில் சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை அரசு சீண்டுவதாக பேச்சுகள் அடிப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த, இந்து சமய அறிநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "சிதம்பரம் நடராஜர் கோயிலில் எல்லாம் சரியாக நடந்தால் அரசு எதிலும் தலையிடாது" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, "வரலாற்றில் இல்லாத அளவிற்கு கோயில் சொத்துகளை அதிக அளவில் மீட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இதுவரை ரூ.6,955 கோடி மதிப்புள்ள கோயில் சொத்து மீட்கப்பட்டுள்ளது. ரூ.1,77,968 ஏக்கர் கோயில் நிலங்கள் ரோவர் கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 24 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage