இந்தியாவில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்தாலும், பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கத்தான் செய்கிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் தக்காளி விளைச்சல் குறைந்து சப்ளை டிமாண்ட் காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
தக்காளி விலை உயர்வின் காரணமாக நாடு முழுவதும் மக்களுக்கு தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதனால் பிரியாணி சாப்பிடுவதை விட தக்காளி சட்னி சாப்பிடுபவர்கள் கெத்து என மீம் எல்லாம் பறக்கிறது. தக்காளி விலை உயர்வு குறித்து பலர் கிண்டல் செய்தாலும் மக்களின் பர்ஸ்-ல் ஓட்டைபோட்டு நிதி சுமையை மக்கள் தலையில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சில நகரங்களில், மிகவும் அத்தியாவசியமான தக்காளி-யின் விலை ஒரு கிலோவுக்கு 150 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் மக்கள் தக்காளி விலையை ஒரு லிட்டர் பெட்ரோலை விட அதிகம், 2 கிராம் வெள்ளி விலையை விட அதிகம் என கணக்குப்போட துவங்கியுள்ளனர்.
இந்த விலை அதிரடி உயர்வு பொது மக்கள் மத்தியில் உண்மையில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த விலை உயர்வு பருவகால மாற்றத்தால் ஏற்பட்டது என்றும் அடுத்த 15 நாட்களுக்குள் விலை சரிந்து நிலைமை மாறும் என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இந்தியாவில் தற்போது அதிகபட்சமாக விசாகப்பட்டினத்தில் தக்காளி ஒரு கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தக்காளி மட்டும் அல்லாமல் இஞ்சி, பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ் என பல காய்கறிகள் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் தக்காளி ஒரு கிலோ 160 ரூபாயை தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் சிலிகுரியில் கிலோ ₹155 ஆகவும், உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் 150 ரூபாயாகவும், டெல்லி-யில் 110 ரூபாய், கொல்கத்தா 148 ரூபாய் ஆக உள்ளது.
சென்னை-யில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் 58 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பில் இருந்தே பெங்களூரில் தக்காளி விலை 100 ரூபாயை தாண்டியது.