சென்னை: தமிழக சட்டப் பேரவையில் இரண்டு நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 10 நாட்கள் சட்டசபைக் கூட்டம் நடந்தது. பேரவை விதிகளின்படி, கடைசி சட்டசபை கூட்டம் நடந்து முடிந்த 6 மாதங்களுக்குள் மீண்டும் அவையைக் கூட்ட வேண்டும். இதையடுத்து இன்று அவைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும் கூட்டம் நடைபெறுகிறது. அவையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். அந்த வகையில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் வீர வசந்தராயர் கோயில் மண்டபம் புனரமைப்பு பணிகள் குறித்து அதிமுக எம்.எல்.ஏ. செல்லூர் ராஜூவின் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், வீர வசந்தராயர் மண்டபம் எப்போது புதுப்பிக்கப்படும். துணைக் கோயிலான செல்லூர் பகுதியில் கோவில் குடமுழுக்கு மற்றும் புனரமைப்பு பணிகள் எப்போது நடக்கும் என்று செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துப் பேசுகையில், வீர வசந்தராயர் திருக்கோவிலில் 2018 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீவிபத்திற்கு பிறகு அப்போதைய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு குழு அந்த 3 ஆண்டுகளில் சிறுசிறு பணிகளை மேற்கொண்டது. ஆனாலும், வீர வசந்தராயர் கோவிலுக்கு 25 அடி நீளம் கொண்ட கற்தூண்கள் தேவைப்படுகிறது. அதற்காக, ஒரே அளவான கற்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, தலைமைச் செயலாளர் தலைமையில் கூட்டம் கூட்டி தற்போது கற்களை எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ. 19 கோடி அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வீரவசந்தராயர் மண்டபத்தை ஒவ்வொரு இந்து சமய அறநிலையத் துறை ஆய்வுக் கூட்டத்திலும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. வெகு விரைவில் புனரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
அதேபோல, செல்லூர் பகுதியில் உள்ள அய்யனார் கோயிலின் கும்பாபிஷேகம் நடத்தப்படும். மீனாட்சியம்மன் கோவில் பணிகளை பொறுத்தவரையில் 63 பணிகளில் 40 பணிகள் உபயதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீதமுள்ள 23 பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் நிச்சயமாக கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று எங்களின் பக்தனான செல்லூர் ராஜூக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage