டெல்லி: வீர சாவர்க்கர் பற்றி விமர்சித்து வரும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சாவர்க்கர் 11 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த அந்தமான் சிறைக்கு அழைத்துச் சென்று காண்பிக்க வேண்டும் என்று லோக்சபாவில் பாஜகவின் ரவிசங்கர் பிரசாத் எம்பி சாடியுள்ளார். லோக்சபாவில் அரசியல் சாசனம் மீதான விவாதங்களுக்கு பதிலளிக்கையில் ரவிசங்கர் பிரசாத் இதனைத் தெரிவித்தார்.
அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதங்களில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம் என பாஜகவினர் பேசுவதே அரசியல் சாசனத்தை ஏற்காத வீர சாவர்க்கருக்கு எதிரானது என்றார். மேலும் மனுஸ்மிருதி புத்தகத்தை கையில் ஏந்தியபடி இந்த புத்தகத்தின் படிதான் தற்போதைய ஆட்சி நடைபெறுகிறது; அன்று துரோணாச்சாரியார் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டியதைப் போல நாட்டு மக்களின் கட்டை விரல்களை வெட்டிக் கொண்டிருக்கிறது பாஜக எனவும் விமர்சித்தார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் பதில் கொடுத்து வருகின்றனர். லோக்சபாவில் பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் பேசுகையில், வீர சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி விமர்சிக்கிறார். ராகுல் காந்தியை அந்தமான் ஜெயிலுக்கு அழைத்துச் சென்று காட்ட வேண்டும்; அங்குதான் நாட்டு விடுதலைக்காக வீர சாவர்க்கர் 11 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சர்தார் வல்லபாய் பட்டேல்தான் 550 சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியவர்; அன்று ஜவஹர்லால் நேரு செய்த தவறுகளை இன்று பிரதமர் நரேந்திர மோடிதான் சரி செய்துள்ளார் என்றார். மேலும் இன்று அரசியல் சாசன பாதுகாப்பு பற்றி பேசுகிற காங்கிரஸ்தான் 1975-ல் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க நாங்கள் பேசிய போது எமர்ஜென்சி காலத்தில் தடியடி நடத்தி சுஷில் மோடியுடன் என்னையும் கைது செய்தது எனவும் ரவிசங்கர் பிரசாத் சுட்டிக்காட்டினார்.