சனாதனத்தின் அவமரியாதையை இளையராஜா ஏற்றுக்கொண்டாலும் கூட.. கண்டனம் கூறுவோம்! - எழுத்தாளர் சங்கம்

post-img
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு சென்றிருந்த இளையராஜாவை, கோயில் கருவறைக்குள் அனுமதிக்காது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், இளையராஜா இந்த அவமானங்களை ஏற்றுக்கொண்டாலும் கூட, நாம் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. வெறும் இசையமைப்பாளராக மட்டுமல்லாது, தமிழக சினிமா உலகையே தனது இசை ஆளுமையால் கட்டி ஆண்டுக்கொண்டிருப்பவர்தான் இளையராஜா. சினிமா பாடல்களை தாண்டி பக்தி பாடல்களுக்கும் இசை அமைத்து வருகிறார். இப்படி இருக்கையில், இவர் இசையமைத்து வெளியான திவ்ய பாசுரம், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த இளையராஜா, ஆண்டாள் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். அவரது வருகையை அறிந்த இந்து சமய அறநிலையத்துறை, சிறப்பான வரவேற்பை அளித்திருந்தது. அதேபோல கோயில் நிர்வாகம் சார்பிலும் இளையராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சின்ன ஜீயர் சடகோப ராமானுஜ ஐயரும், மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ சடகோப ராமானு ஜீயரும் பூரண கும்ப மரியாதை அளித்து இளையராஜாவை வரவேற்றிருந்தனர். கோயிலின் ஸ்தல வரலாற்றை விளக்கியவாறே இளையராஜாவை கோயிலுக்குள் அழைத்து வந்தனர். அப்போது ஜீயரும் அவருடன் வந்த மற்ற அர்ச்சகர்களும் கோயில் கருவறைக்குள் நுழைந்தனர். அவர்களுடன் இளையராஜாவும் நுழைய முயன்றார். ஆனால், இடைமறித்த ஜீயர் உள்ளிட்டோர் உள்ளே அனுமதி கிடையாது என்று மறுத்தனர். இதனையடுத்து திரும்பி கருவறை படிக்கு வெளியே வந்த இளையராஜா, அங்கிருந்தே சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியது. பலரும் இளையராஜா அவமானப்படுத்தப்பட்டதாக கண்டனம் தெரிவித்தனர். இசை உலகை ஆளும் ராஜாவுக்கே இந்த நிலைமையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதே நேரம், அவர் பாஜக சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். எம்பிகளுக்கே கோயில் கருவறைக்குள் அனுமதியில்லையா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் சர்ச்சையானதையாடுத்து, கோயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதில், "ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறை மட்டுமின்றி, அர்த்த மண்டபத்திற்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. உற்சவர் வீற்றிருக்கும் அர்த்த மண்டபமும் கருவறையாக பாவிப்பதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விளக்கம் ஒருபுறம் இருந்தாலும் இளையராஜாவுக்கு ஆதரவான குரல்களே அதிகம் எழுந்துள்ளன. குறிப்பாக இளையராஜாவை அனுமதிக்காதவர்கள் மீதும், கோயில் நிர்வாகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) மாநில பொதுச்செயலாளராக உள்ள ஆதவன் தீட்சண்யா, "கோவில் (சனாதனத்தின்) அவமரியாதையை அவர் ஏற்றுக் கொண்டாலும் கண்டனம் முழங்குவோம். மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்பதான உபதேசங்களைப் பிறகு பேசுவோம். இப்போதைக்கான தலையீடு வழிபாட்டுரிமை மறுப்பையும் அவமதிப்பையும் கண்டிப்பதும் சட்டப்பூர்வ நடவடிக்கையை கோருவதுமாகும். ஒருவேளை இளையராஜாவே கண்டிக்க மறுத்தாலும்" என்று கூறியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்திற்கு எதிராக பேசியிருந்தது பெரும் பஞ்சாயத்தை கிளப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post