சென்னை: மதுரையில் 31.9 கிலோமீட்டருக்கு ரூ11,390 கோடியிலும், கோவையில் 39 கிலோமீட்டருக்கு ரூ.10,700 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு, மத்திய அரசுக்கு விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது. இதில் சில கேள்விகளை மத்திய அரசு எழுப்பியதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆவணங்களுடன் விளக்கம் அளித்துள்ள நிலையில் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் வேகமெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் சென்னையில் மெட்ரோ ரயில் மூலம் 3 லட்சம் பயணிகள் பயணித்து வருகின்றனர். இதற்கு அடுத்தப்படியாக மெட்ரோ ரயில் திட்டத்தை கோவை, மதுரையில் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை சமீபத்தில் தயாரிக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் சார்பில் கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் வழித்தடம், செலவினம் குறித்த விபரங்களுடன் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
அதன்படி கோவையில் அவிநாசி சாலை, சத்தி சாலை ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 39 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து டவுன் ஹால், அவிநாசி சாலை வழியாக நீலாம்பூர் வரை 23 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 2ம் கட்டமாக கோவை ரயில் நிலையத்திலிருந்து சத்தி சாலையில் கோவில்பாளையம் அருகேயுள்ள வழியாம்பாளையம் வரை 16 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த மதிப்பு என்பது ரூ.10,700 கோடியாகும்.
அதேபோல் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் என்பது திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 31.9 கிலோமீட்டர் தொலைவுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் ரூ.11,300 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையை ஒப்பிடும்போது மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் தொலைவு என்பது குறைவு தான். ஆனால் கோவையை விட மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தான் அதிக நிதி தேவையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் கோவையில் மெட்ரோ சுரங்கபாதை கிடையாது. ஆனால் மதுரையில் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைத்து அதன் வழியே மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த திட்ட அறிக்கைக்கு மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும். இதனால் தமிழக அரசு சார்பில் விரிவான திட்ட அறிக்கையை 3 வாரங்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. அந்த விரிவான திட்ட அறிக்கையை பார்த்த மத்திய அரசு சில சந்தேகங்களை கேட்டு இருந்தது. இதற்கு பதிலளிக்கப்பட்டுள்ள நிலையில் அதுபற்றி சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டின் இயக்குநர் அர்ஜுனன் கூறியுள்ளார். மேலும் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுபற்றி அர்ஜுனன் கூறியதாவது: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தொடர்பாக சில கேள்விகளை மத்திய அரசு முன்வைத்தது. அதற்கு உரிய விளக்கங்கள் ஆவணங்களுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது அதிகபட்சமாக 11 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மக்கள் வரை தினமும் மெட்ரோ ரயிலில் பயணிப்பார்கள். பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக நினைக்க வேண்டும்.
ஏனென்றால் சென்னை மெட்ரோ ரயிலில் தினமும் 1 லட்சம் பயணிகள் தான் பயணித்தனர். தற்போது தான் 3.2 லட்சம் பயணிகள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நாளடைவில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை என்பது அதிகரிக்கும். தற்போது பணத்தை விட நேரம் தான் மிகவும் முக்கியமானதாக உள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் ஒரு நகரில் வரும்போது அது மக்களின் பயண நேரத்தை குறைக்கும். அதேபோல் மக்கள் அதிகளவில் சொந்த வாகனங்களை பயன்படுத்துவதை குறைப்பார்கள்'' என்றார்.