சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. இதுதொடர்பா சத்தியம் டிவி மேற்கொண்ட சர்வேயில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு முதன் முறை வாக்காளர்கள் 45 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். மேலும் பெண்கள், அரசு ஊழியர்களின் ஆதரவு எப்படி உள்ளது? என்பது பற்றி இந்த சர்வேயில் விபரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 2026ல் மீண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை திமுக, அதிமுக, பாஜக கூட்டணி, நாம் தமிழர் இடையே போட்டி இருந்தது.
விஜய் தற்போது கூட்டணி அமைத்து போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். இருப்பினும் கூட்டணிக்கு விஜய் தான் தலைமையேற்பார் என்று சொல்லப்படுகிறது. இதனால் வரும் தேர்தலில் தமிழகத்தில் 5 முனை போட்டி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மக்களிடம் ஆதரவு எப்படி உள்ளது? என்பது பற்றி சத்தியம் டிவி சார்பில் மெகா சர்வே மேற்கொள்ளப்பட்டது. மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் 15 தொடங்கிய சர்வே 21 நாட்கள் நடந்தது. இந்த சர்வேயை பத்திரிகையாளர்கள், மாணவர்கள் என்று 110 பேர் மேற்கொண்டனர். அனைத்து தரப்பு மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் அந்த சர்வேயின் முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
அந்த சர்வேயில் நடிகர் விஜய்க்கு துறை வாரியாக மக்களின் ஆதரவு எவ்வளவு உள்ளது? என்ற விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் விவசாயிகள் 7 சதவீதம் பேரும், அரசு ஊழியர்கள் 10 சதவீதம் பேரும், தனியார் ஊழியர்கள் 12 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் இல்லத்தரசிகர் 6 சதவீதம் பேரும், வணிகர்கள் 4 சதவீதம் பேரும், அமைபு்பு சாரா தொழிலாளர்கள் 10 சதவீதம் பேரும், முதியார் 2 சதவீதம் பேரும், மற்றவர்கள் 4 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக முதன்முறை வாக்காளர்களாக உள்ளவர்களில் 45 சதவீதம் பேர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஒவ்வொரு தேர்தலிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் முதன்முறை வாக்களிப்போரை குறிவைத்து பிரசாரம் செய்யும். இவர்களின் ஓட்டுகள் தேர்தலில் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும். அந்த வகையில் வரும் தேர்தலில் முதன்முறை வாக்காளர்களின் ஓட்டு என்பது விஜய்க்கு அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை தான் இந்த சர்வே காட்டுகிறது.