பிரிவுகளைத் தாண்டி வளர்ந்த திமுக!..75 ஆண்டுகள் சாதனை.. வெற்றிக்கு யார் காரணம்?

post-img

சென்னை: திமுக தனது பவளவிழாவை மிகச் சிறப்பாக வேலூரில் கொண்டாடி இருக்கிறது. எந்த ஆண்டும் இல்லாத கூடுதல் சிறப்பை இந்த ஆண்டு திமுக 'முப்பெரும் விழா'வுக்கு கிடைத்திருக்கிறது. ஒரு மாநிலக் கட்சி 75 ஆண்டுகள் நீண்டு நிலைத்து நிற்பது சாதாரண விசயம் இல்லை. அது சரித்திர சாதனை. அதற்கு முதல் விதையைப் போட்டவர் அண்ணாதுரை.


அவர்தான் 1949 செப்டம்பர் 17 அன்று ராபின்சன் பூங்காவில் தனது கட்சியை அதிகாரப்பூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார். அன்று திமுகவின் தலைமையகம் வடசென்னையில் உள்ள ராயபுரத்திலிருந்தது. வடசென்னையில் உருவாக ஒரு கட்சி இன்று வடமாநிலங்கள் வரை கவனத்தை ஈர்த்துள்ளது. நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாகத் தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.


ராயபுரத்துக்குப் பின்னர் தேனாம்பேட்டை 'அன்பகம்' திமுகவின் தலைமையகமானது. அதற்குப் பின்னர் மு.கருணாநிதி, அண்ணாசாலையில் 'அண்ணா அறிவாலய'த்தை கட்சியின் கோட்டையாகக் கட்டி எழுப்பினார். அதுவே திமுகவின் ஆகப்பெரும் அடையாளமாக இதுவரை கொடிகட்டிப் பறக்கிறது.


திமுகவின் சார்பில் 1967இல் அண்ணாதுரை முதன்முறையாக முதலமைச்சராக அரியணை ஏறினார். இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி அதிகப் பெரும்பான்மையுடன் ஆட்சியை ஆட்சி அமைத்தது இதுவே முதல் தடவை. முன்னதாக இதற்கு எந்த முன்மாதிரியும் இல்லை. புதிய சரித்திரம்தான் இது.


திமுக சார்பில் அண்ணா ஒருமுறை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரியாகச் சொன்னால் 23 மாதங்கள் அவர் ஆட்சி செய்ததாக, அவர் 1969இல் மறைந்த போது இன்டியன் எஸ்க்ஸ்பிரஸ் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. அவருக்குப் பின் திமுகவின் சார்பில் 5 முறை முதல்வராக அரியணையில் அமர்ந்தவர் மு.கருணாநிதி. சொல்லப்போனால் அண்ணாவைவிட அதிக காலம் கட்சியின் தலைமை தன் கைக்குள் வைத்திருந்தவர் இவர்தான். ஏறக்குறைய 80 வருடங்கள் திமுகவின் முகமாக இவர்தான் இருந்தார்.


இவருக்குப் பின்னர் இன்று திமுக சார்பில் 3 ஆவது தலைமுறை முதல்வராக அமர்ந்துள்ளார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இப்படி திமுக நேரடியாக 3 முதல்வர்களைத் தமிழ்நாட்டிற்குத் தந்துள்ளது. ஆனால், மறைமுகமாக 8 முதல்வர்களை உருவாக்கி இருக்கிறது. அது எப்படி?


திமுகவின் சார்பில் அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் என 3 முதல்வர்கள். அதே திமுகவிலிருந்து உடைந்து உருவான அதிமுகவிலிருந்து எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெ.ஜெயலலிதா, ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என 5 முதல்வர்கள் கிடைத்துள்ளனர். ஆக மொத்தம் தாய் கட்சியான திமுக வழியில் தமிழ்நாட்டிற்கு 8 முதல்வர்கள் கிடைத்துள்ளனர்.
திமுகவிலிருந்து பிரிந்து முதலில் கட்சி ஆரம்பித்தவர் ஈரோடு வெங்கட நாயக்கர் கிருஷ்ணசாமி சம்பத். என்ன புரியவில்லையா? அதாவது ஈ.வெ.கி. சம்பத். பெரியாரின் அண்ணன் மகன். ஈவிகேஎஸ் இளங்கோவனின் தந்தை. சம்பத் நீதிக்கட்சிக் காலத்திலேயே அரசியல் உலகில் பெரும்புள்ளி.


திமுகவின் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட இவர், 1961இல் திராவிட நாடு கொள்கை அண்ணா கைவிட்டபோது, ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் திமுகவிலிருந்து பிரிந்து தமிழ்த் தேசியக் கட்சியை ஆரம்பித்தார்.
இதில் கண்ணதாசன், சிவாஜி கணேசன், பழ. நெடுமாறன் ஆகியோர் முக்கிய அங்கம் வகித்தனர். தொடங்கிய வேகத்திலேயே 1964இல் இந்தியத் தேசிய காங்கிரசுடன் தனது கட்சியைக் கரைத்துவிட்டார். அதன் பின்னர் அதற்குத் தமிழ்நாட்டில் அடையாளம் இல்லாமல் போனது.


சம்பத் வெளியேறிய போது திமுகவில் பெரிய அளவில் சலசலப்பு நிலவியது. ஆனால், அவர் அண்ணா என்ற பெரிய ஆலமரத்திற்கு முன்னால் காணாமல் போனார்.
அதற்கு அடுத்து திமுகவில் பெரிய புயலைக் கிளப்பியவர் எம்.ஜி.ஆர். கட்சியின் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர் தி.மு.க.விலிருந்து 1972இல் வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். இவர் கட்சியின் கணக்குவழக்கைக் கேட்டதால் வெளியேற்றப்பட்டார் என்பது சாமானிய மக்கள் வரை போய்ச் சேர்ந்துள்ள செய்தி.


அந்நாளில் தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப் பெரிய பிளவு எம்.ஜி.ஆரின் வெளியேற்றம் என்று இதைக் கூற முடியாது. காரணம், எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்ட போது பெரிய அளவிலான திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் அவருடன் செல்லவில்லை. ஆனால், அவர் தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரிய கட்சியாக மாறியது. ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அவர் வளர்ந்தார். அதனால், திமுக என்ற கட்சிக்குப் பெரிய இழப்பு ஏற்படவில்லை.


அதன்பின்னர் 1980 தொடங்கி 87 வரை அவர்தான் தமிழ்நாட்டின் முதல்வர். இவரது மறைவுக்குப் பின் அவரது மனைவி ஜானகி தமிழ்நாட்டின் தமிழ்நாட்டின் 4வது முதலமைச்சரானார். அவர் வசம் இருந்த அதிமுக இரண்டாக உடைந்தது.


இரட்டை புறா, சேவல் என இரண்டு சின்னங்களில் ஜானகி அணியும் ஜெயலலிதா அணியும் மோதின. வெற்றி ஜெ பக்கம் சாய்ந்தது. அதிமுக அதிகாரப்பூர்வமாக ஜெ.ஜெயலலிதா கைக்கு மாறியதால் ஒட்டுமொத்தமாக அரசியல் வாழ்வைவிட்டே விலகினார் அவர்.

 

ஆட்சியை திமுகவிடமிருந்து கைப்பற்றிவிட்டாலும், ஆளுமையாக்கத் தலைவரான மு.கருணாநிதியை, அவ்வளவு எளிதாக எம்.ஜி.ஆரால் சமாளிக்க முடியவில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருந்தே திமுகவைக் கட்டுக்கோப்பாக வளர்த்தார் மு.க.
அதற்கு அவரது பேச்சாற்றல் பெரிய பலமாக இருந்தது. எந்தத் தோல்வியும் தன்னை தாக்காமல் இருக்க அவர் இலக்கியத்தைத் துணையாக வைத்துக்கொண்டார். அதைக் கொண்டு அவர் தரப்பை நியாயப்படுத்தி வந்தார். அந்தத் திறமை அவரது தொண்டர்களை ஈர்ப்பதாக இருந்தது.


ஒரு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின்னர் நடைபெற்ற கவியரங்கத்தில், 'இடியமின் ஆட்சியில் இடைத்தேர்தல் எதற்கு?' என மு.கருணாநிதி படித்த கவிதை, இன்றுவரை அவரது தொண்டர்களை உற்சாகத்தில் வைத்திருக்கும் மந்திரச் சொல்லாக வலம் வரும் அளவுக்கு வலுப்பெற்றுள்ளது.


எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த இரா. நெடுஞ்செழியன், 1977இல் தி.மு.க.விலிருந்து பிரிந்து, க. இராசாராம் உடன் சேர்ந்து, 'மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்' என்னும் கட்சியைத் தொடங்கினார்.
திமுகவில் நடந்த 3வது பிளவு இது. அதே ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவுடன் தன் கட்சியை முழுமையாக இணைத்துவிட்டார். அந்தக் கட்சி சுவடு அத்துடன் மறைந்தே போனது.
திமுகவில் ஏற்பட்ட பிளவுகளுடன் ஒப்பிடும் போது, திமுகவிலிருந்து பிரிந்து சென்ற அதிமுகவில்தான் அதிக பிளவுகள் ஏற்பட்டுள்ளன. ஜெவுடன் ஏற்பட்ட கசப்புகள் காரணமாக 'அண்ணா புரட்சித் தலைவர் தமிழக முன்னேற்றக் கழகம்' என்றொரு கட்சியை ஆரம்பித்தார் திருநாவுக்கரசு. அவர் திமுகவுடன் கூட்டணி அமைத்தார்.


அந்தத் தேர்தலில் திமுக ஒரு தொகுதியில் வென்றது. இவரது கட்சி இரண்டு இடங்களில் வென்றது. 1996இல் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். மீண்டும் ஜெவுடன் யுத்தம். வெளியேறி 'எம்ஜிஆர் அதிமுக' என்ற புதுக்கட்சியை உருவாக்கினார். அதன் பின்னர் அவர் ஆரம்பித்த கட்சிகளும் காணாமல் போனது.


இதே அதிமுகவிலிருந்து பிரிந்துபோன ஆர். எம். வீரப்பன் எம்.ஜி.ஆர். கழகம் என்ற கட்சியை 1995இல் தொடங்கினார். திமுகவுடன் கூட்டணி வைத்தார். பின்னர் அக்கட்சி காணாமல் போனது.
இதே திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தவர் டி. ராகேந்தர். பூங்கா நகர் தொகுதியில் வென்று திமுகவின் சட்டமன்ற உறுப்பினரானவர். பின் கருத்து வேறுபாட்டால், திமுகவிலிருந்து விலகி தாயக மறுமலர்ச்சி கழகம் எனக் கட்சி தொடங்கினார்.
அதிமுகவின் முக்கிய தலைவர்களின் ஒருவரான எஸ்டிஎஸ், அவர்தான் எஸ்.டி.சோமசுந்தரம் அணி போட்டி அதிமுக என செயல்பட்டது. பின்னர் இது நமது கழகம் ஆனது. பின்னர் அரசியல் கடலில் இந்தக் கப்பல் மூழ்கிப் போனது.


எம்.ஜி.ஆரின் மூளையாகக் கருதப்பட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன். எம்.ஜி.ஆர் மறைக்குப் பின் ஜெ அணியை உருவாக்கியவர்களில் ஒருவர். ஆனால், காலப்போக்கில் ஜெ இவரை ஓரங்கட்டவே அவர் பாமக போனார்.
பின்னர் மக்கள் நல உரிமைக் கழகம் என 1997இல் புதிய கட்சி தொடங்கி, திமுக உடன் கூட்டணி வைத்தார். அண்ணா காலத்தில் திமுகவிலிருந்த பண்ருட்டி, அதிமுக தொடங்கிய போது அதில் இணைந்து எம்.ஜி.ஆரின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் என்பதை மறக்காமல் இங்கே சொல்ல வேண்டும்.


திமுகவில் எம்.ஜி.ஆருக்குப் பின் ஒரு பிரிவை உருக்கியவர் டி ராஜேந்திரன். பூங்கா நகரில் திமுக சார்பில் நின்று வென்று சட்டசபைக்குச் சென்ற இவர், 1991 இல் தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற தனிக் கட்சியைக் கட்டினார். பின்னர் அது இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் ஆனது. அதற்குப் பின்னால் என்ன ஆனது என்பதைத் தமிழக மக்கள் அறிவர்.


இவருக்குப் பிறகு திமுகவில் ஒரு பிளவை வை. கோபால்சாமி உருவாகினார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன், கருணாநிதிக்கு அனுப்பிய ஒரு கடிதம் பெரிய புயலையே அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியது.
அதாவது திமுக தலைவர் மு.கருணாநிதியை விடுதலைப்புலிகளின் உதவியுடன் வை கோபால்சாமி கொல்ல திட்டம் தீட்டி உள்ளதாக ஐ.பிக்கும் ராவுக்கும் கடிதம் கிடைத்திருப்பதாகக் கூறிய அந்தக் கடிதம் கருணாநிதிக்குத் தக்க பாதுகாப்பு அளிப்பதற்கு அனுமதி கேட்டிருந்தது. அதன் மூலம் திமுக மீண்டும் உடைந்தது.
திமுகவில் உள்ள 29 மசெகளில் 8 பேர் கோபால்சாமிக்கு ஆதரவு தெரிவித்ததாகச் சொல்லப்பட்டது. அதில் 12 மசெகள் மு.கருணாநிதியைப் பக்கம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்த விவகாரம் குறித்து "வை. கோபால்சாமி விவகாரமொரு சின்ன சேதாரமே தவிரப் பெரிய பிளவு என்று நான் நினைக்கவில்லை" என்று பேட்டி அளித்தார் அன்றைய திமுக தலைவர் மு.கருணாநிதி.


அந்தப் பிளவையும் சமாளித்து கட்சியைப் பெரிய கட்டுக்கோப்பான இயக்கமாக மாற்றிக் காட்டினார் மு.கருணாநிதி. கால வெள்ளத்தில் திமுகதான் கருணாநிதி, கருணாநிதிதான் திமுக என்ற உண்மையை உலகத்திற்கு நிரூபித்துக்காட்டினார் அவர்.
அண்ணாதுரையால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் 75 ஆண்டுகள் பல வீழ்ச்சிகளையும் அடைந்து நிலைத்து நிற்பதற்கு மிக முக்கியமான காரணம் ஒருவர்தான். அவர் வேறு யாரும் இல்லை. கருணாநிதிதான். அவரால் வளர்ந்தது இந்தக் கட்சி. இப்போது அதற்குத்தான் பவளவிழா தொடங்கி உள்ளது.


இந்தப் பவளவிழாவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், "பவளவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நம் கழகம். சாமானிய இளைஞர் படையின் தளபதியான அண்ணா தலைமையில் கழகம் ஆட்சியைப் பிடித்தது, தெற்காசியாவின் 20-ஆம் நூற்றாண்டு அரசியல் வரலாற்றை எழுதும் எவராலும் தவிர்க்க முடியாத பெருநிகழ்வு!
திரும்பிப் பார்த்தால், எத்தனையோ நெருக்கடிகள், போராட்டங்கள், சிறைவாசங்கள், தியாகங்கள், மிரட்டல்கள், பெருவெற்றிகள், படுதோல்விகள்... எனினும் முக்கால் நூற்றாண்டு ஆகியும், கழகத்தின் வலிமை குன்றவில்லை!


கழகத்தோடு அக்காலத்தில் தொடங்கப்பட்ட இயக்கங்கள் எல்லாம் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன, கரைந்துபோய் விட்டன. எதிர்நீச்சல் போட்டு இன்றளவும் கொண்ட கொள்கைக்காக நெஞ்சு நிமிர்த்தி நிற்பது தி.மு.கழகம் மட்டுமே!
இந்திய நிலப்பரப்பில், மற்ற அனைத்து மாநிலங்களிலிருந்தும் இன்று தமிழ்நாடு கொண்டிருக்கும் தனித்துவமான பண்பு என்பது தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் முதலிய நம் தலைவர்களின் தொடர் பரப்புரையால்தான் சாத்தியமானது!
முழுக்க முழுக்க ஜனநாயக வழிமுறையால், பகுத்தறிவுச் செயல்பாடுகளால் இதனைச் செய்து காட்டியுள்ளோம் என்பதுதான் உலகில் வேறு எந்த இயக்கத்துக்கும் இல்லாமல் நம் திராவிட இயக்கத்துக்கே உரியப் பெருமை" என்று தெரித்துள்ளார்
இந்தப் பெருமை விரைவில் 100 ஆண்டுகளை எட்டி கொடிகட்டிப் பறக்கப் போகிறது!

Related Post