மார்க்சிஸ்டுக்கு “சத்திய சோதனை”.. ‘இந்தியா’வில் மம்தா கட்சியால் சிக்கல்!

post-img

டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் இன்றும் நாளையும் நடைபெற இருக்கிறது.
இந்தியா கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் தேர்தல், கூட்டணி செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் இன்று கூடுகிறது.


இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெறும் சிபிஎம் கட்சியின் பிரதிநிதியும் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா கூட்டணியில் இணைவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பல கட்ட ஆலோசனைகளை நடத்தியதாகவும், மிக மிக கவனத்துடனே இந்த முடிவை எடுத்ததாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை எதிரும் புதிருமான நிலையில் உள்ளன. இத்தகைய சூழலில் அந்த கட்சிகளுடன் ஒரே கூட்டணியில் கைகோர்ப்பது சாத்தியப்படுமா என்பது பற்றி அம்மாநில கட்சி நிர்வாகிகளுடன் பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி உள்ளார்கள்.


மேற்கு வங்கத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய கமிட்டி உறுப்பினர் தெரிவிக்கையில், "பொதுவாக கட்சி பொலிட் பீரோ ஒரு விசயத்தில் முடிவெடுத்துவிட்டு, அதன் பின்னர் மத்திய கமிட்டியின் கருத்தை கேட்கும். ஆனால், இந்தியா கூட்டணிக்கான மார்க்சிஸ்ட் பிரதிநிதியை தேர்வு செய்யும் விசயத்தில், மத்திய கமிட்டியிடம் கேட்ட பிறகே முடிவு செய்ய வாய்ப்பு இருக்கிறது.


இந்தியா கூட்டணி கூட்டங்களில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி மேடையை பகிர்ந்து வருவது மேற்கு வங்கத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. திரிணாமூல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி மீதான ஊழல் புகாருக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டங்களை நடத்திவிட்டு அவருடனே மேடையை பகிர்வது கடினம் என மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் கருதுகிறார்கள்.


எனவே பொலிட்பீரோ இந்தியா கூட்டணிக்காக தங்கள் கட்சியின் பிரதிநிதியை அவ்வளவு சுலபமாக தேர்வு செய்யாது என்பதே மார்க்சிஸ்ட் கட்சியினரின் கருத்தாக உள்ளது. தற்போது இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவில் 13 உறுப்பினர்கள் உள்ளார்கள். இதில் 14 வது உறுப்பினர் பதவி மார்க்சிஸ்ட் கட்சிக்காக காலியாக விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Post